சிவன்மலை உத்தரவு..! வெற்றிவேல் வீர வேல்… என்ன பொருள்?!

ஆன்மிகச் செய்திகள் கோவை லைஃப் ஸ்டைல்

sivanmalai vel - 2026

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு இந்த முறை வேல் வைக்க ஏற்பாடாகியுள்ளது.

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இந்த முறை வேல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ‘அதர்மம் ஒழிந்து நன்மை பெருகும்’ என பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்கள் கனவில் சிவன்மலை ஆண்டவர் குறிப்பிடும் பொருள் இந்தப் பெட்டியில் வைத்து பூஜிக்கப் படுவது வழக்கமாக உள்ளது.

இதில் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கம் அல்லது நடக்கப் போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாக அமையும். இது  பக்தர்களின் நம்பிக்கை.

கடந்த பிப்.6 ஆம் தேதி முதல் காவிரி ஆற்று நீர் தீர்த்த கலசம் வைத்து பூஜிக்கப் பட்டது. தற்போது வேல் இடம் பெற்றுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த 50 வயதான சந்திரபுஷ்பம்  என்ற பக்தரின் கனவில் வேல் வைக்க உத்தரவானது. அதைத் தொடர்ந்து வெள்ளியில் செய்யப்பட்ட வேல் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.

vel sivanmalai - 2026முருகக் கடவுளிடம் உள்ள வேல் அதர்மம் மற்றும் தீமையை அழிக்கும் சக்தி கொண்டது. ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில்வேல் இடம் பெற்றுள்ளதால் நாட்டில் அதர்மம், தீமை அழியும்; நன்மை பெருகும் என்று ஆலய சிவாசாரியர் ஒருவர் கூறினார்.

உத்தரவுப் பெட்டியில் வேல் வைப்பதற்குக்  கொடுத்த பக்தர் சந்திரபுஷ்பம் இது குறித்துக் கூறுகையில், திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு அடிக்கடி செல்வேன். என் கனவில் தோன்றிய முருகப்பெருமான் ‘என் சந்நிதியில் உள்ள பெட்டியில் வேல் கொண்டு போய் வை’ எனக்கூறி மறைந்தார். இதுகுறித்து பலரிடம் விசாரித்தேன். சிவன்மலையில் பெட்டி இருப்பதை அறிந்து இங்கே வைப்பதற்கு வேல் கொண்டு வந்தேன். நான் இதற்கு முன்  சிவன்மலைக்கு வந்ததில்லை என்று கூறினார்.

– கே.சி.கந்தசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.