மேட்டூர் அணை திறப்பு: வேதனை விலகியதாக எடப்பாடி நிம்மதிப் பெருமூச்சு!

கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

mettur dam openedbycm - 2026

மேட்டூர் அணையை இன்று காலை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையை இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது! மேட்டூர் அணையைத் திறக்க முடியாமல் இருந்தது குறித்து வேதனையில் இருந்தேன்; மழை காலதாமதமாகப் பெய்தாலும் மேட்டூர் அணை நிரம்பி வருகிறது!

விவசாயிகளுக்கு தேவையான நீர் இந்த ஆண்டு வழங்கப்பட்டுவிடும்! 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மேட்டூர் அணை நீரால் பாசன வசதி பெறும்

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களில் 137 நாட்களுக்கு தினமும் தண்ணீர் திறக்கப்படும். 20 மாவட்டங்களில் காவிரி நீர் குடிநீர் ஆதாரமாகத் திகழ்கிறது! கடந்த ஆண்டு பாசனத்திற்கு 212 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது.

விதை நெல் மற்றும் உரம் போதுமான அளவிற்கு கையிருப்பில் உள்ளது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகவும், முறை வைத்தும் பயன்படுத்த வேண்டும்.
வருண பகவான் கருணையால் இந்த ஆண்டு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். கர்நாடகாவில் 2 முக்கிய அணைகளும் நிரம்பிவிட்டன. எனவே அவர்கள் தண்ணீரை திறந்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

சுமார் 500 கோடி ரூபாய் செலவில் இந்த ஆண்டு சுமார் 1800 ஏரிகள் மேம்படுத்தப்பட உள்ளன. எனவே காவிரி நீர் நிச்சயம் நன்கு சேமிக்கப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முன்னதாக, இன்று அதிகாலை 4 மணியளவில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவிரி நீரை வரவேற்று வழிபட்டனர்

கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்ததால், காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 85 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ள நீர் காவிரியில் பெருகி ஓடுகிறது.

ஒகேனக்கல்லில் நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டத்தில் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.