திருவரங்கம்:
பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்று அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவமிக்கது. இதில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் புதன்கிழமை துவங்குகிறது.
பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், நாலாயிரத் திவ்ய பிரபந்தமானது பகல்பத்து மற்றும் ராப்பத்து என 20 நாட்கள் அபிநயத்துடன் படிப்பதாகும். அதற்காக ஸ்ரீரங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை படிக்கத் தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும். ஸ்ரீரங்கம் கோயிலில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் படிக்க ஆரம்பித்த உடன் மற்ற திவ்யதேசங்களில் இருந்து தெய்வப்பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருள்கின்றனர் என்பது ஐதீகம்.
இதனால், இக்கோயிலில் படிக்கும் திவ்ய பிரபந்தத்தை வேறு எங்கும் படிக்க மாட்டார்கள். அப்படி படித்தால் அதற்கு பலன் இருக்காது என்பது நம்பிக்கை. இந்நிகழ்ச்சி மூலஸ்தானம் முன்பாக உள்ள காயத்ரி மண்டபத்தில் புதன்கிழமையன்று இரவு 7 மணிக்கு துவங்கி தொடர்ந்து நடைபெறும்.
இதில் அரையர்கள், பட்டாச்சாரியார்கள் மட்டுமே கலந்துகொள்ள இயலும். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது.
திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழிப் பாடல்களையும், மற்றைய ஆழ்வார்கள் பாடிச்சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக பகல் பத்து உற்சவம் எனப் பெயரிட்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்புமிக்க பகல் பத்து உற்சவம் 29ம் தேதி துவங்குகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் கோயில் வளாகத்தில் கண்ணைக் கவரும் வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பகல் பத்து நிகழ்ச்சியின் 10ம் நாளான வரும் 7ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளிக்கும் வைபவம் நடைபெறும். ஜனவரி 8ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.
இதையொட்டி, நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். சொர்க்கவாசல் திறப்பு தினமான 8ம் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் துவங்குகிறது.