மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

Published:

election voting - 2026

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக., ஆட்சி அமைக்கிறது. அஸ்ஸாமில், பாஜக., ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான பாஜக. அங்கம் வகிக்கும் தேஜ.,கூட்டணி அரசு தக்க வைத்துக் கொண்டுள்ளது. கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவி ஏற்கிறது. தமிழகத்தில் நடிகர் விஜய்யின் தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

தேர்தல் ஆணைய தரவுகளில் இருந்து, இரவு 8 மணி நிலவரப்படி,

அஸ்ஸாம் :

மொத்த இடங்கள் – 126
ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை – 64

ஆளும் பாஜக., கூட்டணியில், பாஜக., தனித்து 81 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது,. ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்தது. எனவே 82 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
போடோலாண்ட் மக்கள் கட்சி (பிஓபிஎஃப்) 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளின் வரிசையில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று 4ல் முன்னிலை பெற்று 19 இடங்களைப் பெற்றது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

அசாம் கண பரிஷத் (ஏஜிபி) 10 இடங்களில் வெற்றி பெற்றது. ஏஐயுடிஎஃப், ரெய்ஜர் தள் தலா இரு இடங்களிலும் திரிணமுல் காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெற்றி பெற்றது.

இதை அடுத்து, அஸ்ஸாமில் பாஜக.,வின் ஆட்சி தொடர்கிறது.

கேரளம்:

மொத்த இடங்கள் – 140
ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை – 71

கேரளத்தில் காங்கிரஸ் – 63, சிபிஎம் – 26, ஐயுஎம்எல் – 22 சிபிஐ – 8 கேரள காங்கிரஸ் – 7 ஆர்எஸ்பி – 3 , பாஜக., – 3 சுயேட்சைகள் – 4 மற்ற கட்சிகள் 4 என வெற்றி பெற்றன.

பாஜக.,வின்கேரள மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேமம் தொகுதியிலும், வி முரளிதரன் கழக்கூட்டம் தொகுதியிலும், பிபி கோபகுமார் சத்தனூர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

இதை அடுத்து கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கிறது.

புதுச்சேரி :

மொத்த இடங்கள் – 30
ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை – 16

புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் – 11 இடங்களில் வெற்றி பெற்று ஓர் இடத்தில் முன்னிலை பெற்று 12 இடங்களைப் பெற்றது.
பாஜக., 4 அதிமுக., – 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகளின் வரிசையில், திமுக., – 5, தவெக., 2, காங்கிரஸ் – 1, லட்சிய ஜனநாயக கட்சி – 1, நேயம் மக்கள் கழகம் – 1 சுயேச்சைகள் -3 என வெற்றி பெற்றுள்ளனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

எனவே புதுவையில் என்.ரங்கசாமி தலைமையிலான ஆளும் தேஜகூ., ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

மேற்கு வங்கம் :

மொத்த இடங்கள் – 294
ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை – 148

மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் 79 இடங்களைப் பெற்று தோல்வியைச் சந்தித்தது. கடந்த 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த திரிணமுல் காங்கிரஸுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது.

பாஜக., 176 இடங்களில் வெற்றி பெற்றும், 32 இடங்களில் முன்னிலை பெற்றும் 208 இடங்களை வசமாக்கியது. திரிணமுல் காங்கிரஸ் 61 இடங்களில் வென்றும் 18 தொகுதிகளில் முன்னிலை பெற்றும் 79 இடங்களைப் பெற்றது.
காங்கிரஸ், ஏஜேயுபி தலா 2 இடங்களிலும், சிபிஎம், ஏஐஎஸ்எஃப் கட்சிகள் தலா 1 இடத்தையும் பெற்றன.

இதன் மூலம் முதல் முறையாக பாஜக., மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது.

தமிழ் நாடு:

மொத்த இடங்கள் – 234
ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை – 118

தமிழ்நாட்டில் ஆளும் திமுக., பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அக்கட்சியின் எதிர்த்தரப்பாக செயல்பட்டு இதுவரை மாறி மாறி ஆட்சி செய்து வந்த அதிமுக.,வும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. புதிதாக தோற்றம் பெற்று முதல் முறையாக தேர்தலில் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், எவரும் எதிர்பாராத வகையில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும், முன்னிலை பெற்றும் வருகிறது. அக்கட்சி தமிழக அரசியல் களத்தில் தனிப்பெரும் கட்சியாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

தவெக., – 95 இடங்களில் வென்றும், 12 இடங்களில் முன்னிலை பெற்றும் 107 இடங்களைப் பெற்றுள்ளது.
திமுக., 51 இடங்களில் வென்றும் 9ல் முன்னிலை பெற்றும் 60 இடங்களைப் பெற்றது. அதிமுக., 42ல் வென்றும், 5ல் முன்னிலை பெற்றும் 47 இடங்களைப் பெற்றது.
காங்கிரஸ் – 5, பாமக.,- 4, ஐயுஎம்எல்-2, சிபிஐ -2 சிபிஎம் -2 விசிக-2, பாஜக.,-1, தேமுதிக-1, அமமுக-1 ஆகிய இடங்களைப் பெற்றன.

இதனால் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை எந்தக் கட்சியும் பெறாத நிலையில், தொங்கு சட்டசபை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் தவெக., ஆட்சியமைக்க அழைக்கப்படக்கூடும்.

Related articles

Recent articles

spot_img