‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணை நடத்த தயக்கமா?- விஜயகாந்த் கேள்வி

Reporters Diary

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தே.மு.தி.க. சார்பில் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என்ற தலைப்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்கள், 3 சக்கர மோட்டார் சைக்கிள்கள், ஊன்று கோல்கள், பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்றவை மீண்டும் நடைபெற தே.மு.தி.க. அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். எந்த வகையிலும் போராடி அதனை நடத்தியே தீருவேன். நான் சட்டசபைக்கு வரவில்லை என குறை கூறுகின்றனர்.

சட்டசபையில் கலந்து கொள்ளும் கட்சிகள் கூட அங்கு வெளிநடப்புதான் செய்ய முடிகிறது. மக்கள் பிரச்சினைகள் பற்றி அங்கு விவாதிக்க முடியவில்லை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை போதுமானது என்று தமிழக அரசு கூறுகின்றது. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்தி வரும் விசாரணையை தமிழகம் அறியும்.

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் பலரும் சி.பி.ஐ. விசாரணை கோருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இதற்கு தயங்குவது ஏன்?. பெண் முதல்வரின் ஆட்சியில் பெண் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை கவலைக்குரியது மட்டும் அல்ல கண்டனத்திற்கு உரியது. நேர்மையான அதிகாரிகள் பாராட்டப்படுவதற்கு பதிலாக பழிவாங்கப்படுகிறார்கள்.

கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. நான் யாரோடு கூட்டணி என்பதை விட என்னோடு யார் கூட்டணி என்பது தான் தற்போதைய நிலை. தே.மு.தி.க.வின் வளர்ச்சியை பற்றி மற்ற கட்சிகள் கவலை கொள்கின்றன. இதுவே 2016ல் தே.மு.தி.க.வின் சிறப்பான நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.