ஆளில்லா விமானம் மூலம் செம்மர கடத்தல்காரர்களை கண்காணிக்க அரசு புதிய திட்டம்

Reporters Diary

ஆந்திர மாநிலம் சேஷாலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பு வேட்டை நடத்தி கடத்தல்காரர்களை கைது செய்து வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் சந்திரகிரி மாவட்டத்தில் பாலபள்ளி காட்டுப்பகுதியில் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்திய 15 பேரை ஆந்திர அதிரடி போலீசார் சுற்றி வளைத்தனர். கடத்தல்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தப்பினர்.

என்றாலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான சின்ன குழந்தை, அண்ணாமலை ஆகியோர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். சுப்பிரமணி, ரவி வேலூரை சேர்ந்தவர்கள். இவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் அந்த பகுதியில் சேலத்தை சேர்ந்த 8 பேர் கைதானார்கள்.இந்த நிலையில் செம்மர கடத்தலை தடுப்பதற்காக ஆளில்லா விமானத்தை பயன்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ஜஸ்தி வேங்கடராமுடு நிருபர்களிடம் கூறியதாவது:–

சேஷாலம் வனப்பகுதியில் செம்மர கடத்தலை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறோம். செம்மர கடத்தல் நடைபெறாமல் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லாத சிறிய ரக விமானத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.

செம்மரகட்டை கடத்தலை தடுப்பதற்காக இந்த யோசனையை முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு முன் வைத்தார்.

அவரது யோசனைப்படி கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லாத சிறிய விமானத்தை பயன்படுத்தலாமா அல்லது பலூன் கேமராவை பயன்படுத்தலாமா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என அவர் கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.