சத்தீஸ்கர் மாநிலம் ஜஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் மிக, மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.படிப்பறிவு அதிகம் இல்லாத அவர்கள் மத்தியில் மூட நம்பிக்கை பழக்க– வழக்கங்கள் அதிகம் உள்ளது. அந்த மூட நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களிடம் 3 பேர் மிகவும் நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டனர்.

ஜஸ்பூர் மாவட்டத்தில் மலை வாழ் கிராமத்துக்கு மோசடி பேர்வழிகள் 3 பேர் சென்றனர். ரோட்டோரத்தில் கூடி தங்களது மோசடி வேலையை அரங்கேற்றினர். பில்லி, சூனியம், மற்றும் கண் திருஷ்டி நீங்கி வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா? எங்களிடம் வாருங்கள் வேதாளம், பேய், பிசாசு உள்ளிட்ட ஆவிகள் மூலம் நன்மைகளை வாரி வழங்குகிறோம் என நம்பும்படி கூறியுள்ளனர்.

அதை நம்பி ஏராளமானவர்கள் கூடினார்கள். அவர்களிடம் மூடி முத்திரையிடப்பட்ட அதாவது சீலிடப்பட்ட பாக்சை காட்டி, ‘இந்தப் பெட்டிக்குள் நன்மை தரக்கூடிய ஆவி உள்ளது. இதன் விலை ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை தான்.

அதை வாங்கி சென்று வீட்டில் வைத்து விடுங்கள். உடனே அதை திறந்து பார்க்கக்கூடாது. இரவில் திறந்து பணம், நகை, பொருள் போன்ற ஐஸ்வர்யங்களை கேட்டால் உடனே அவற்றை அந்த ஆவி வழங்கும்’ என கதை விட்டனர்.அதை நம்பி ஏராளமானவர்கள் பணம் கொடுத்து அந்த பாக்சை வாங்கி சென்றனர். அவர்கள் கூறியது போன்று அந்த பெட்டியை திறந்து தாங்கள் விரும்பியதை கேட்டனர். ஆனால் ஒரு அதிசயமும் நடக்கவில்லை.

இதுகுறித்து பாகிசா நகர போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜி.எஸ். துபே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோசடி பேர் வழிகள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending