ரூ.5 கோடியில் மதுரையில் விளையாட்டு அறிவியல் மையம் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Reporters Diary

முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியதாவது:–

இந்தியாவிலேயே மலை மேலிட பயிற்சி முகாம் இமாச்சல பிரதேசத்தில் ஷில்லாரு மற்றும் கேரளாவில் மூணாறு ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே உள்ளது. பெரும்பாலான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் குளிர் பிரதேசங்களில் நடைபெறுவதால் நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலையை சமாளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். எனவே நமது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் செயல் திறனை மேம்படுத்த ஏதுவாக, உதகமண்டலத்தில் மலை மேலிட பயிற்சி மையம் ஒன்று 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில், 1992 ஆம் ஆண்டு எனது உத்தரவின் பேரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சிறப்பு நிலை பளு தூக்கும் பயிற்சி மையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சதீஷ்குமார் சிவலிங்கம் என்பவர் 2014 ஆம் ஆண்டு கிளாஸ் கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

எனவே, மேலும் பல வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், பதக்கம் வெல்ல ஏதுவாக, இப்பயிற்சி மையம் 2 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் முதன்மை நிலை பயிற்சி மையமாக தரம் உயர்த்தப்படும்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் நம் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் திறம்பட செயலாற்ற அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அறிவியல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு மருத்துவ வசதியுடன் கூடிய அறிவியல் விளையாட்டு மையம் ஒன்று அமைக்கப்படும்.

விளையாட்டு மருத்துவம், விளையாட்டு உளவியல், விளையாட்டு உடற் கூறியல், உயிர் இயந்திரவியல் சத்துணவியல், மறு சீரமைப்பியல் மற்றும் ஊக்க மருந்து எதிர்ப்பு ஆகிய வசதிகளுடன் கூடிய விளையாட்டு அறிவியல் மையம் ஒன்று மதுரையில் 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

தேசிய மாணவர் படை, என்.சி.சி. மாணவர்கள் பல்வேறு திறன்கள் பெறுவது ஊக்குவிக்கப்பட வேண்டும். எனவே, அவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள ஏதுவாக ஓட்டுநர் பாவிப்பு, வானூர்தி பாவிப்பு மற்றும் ஆயுதபாவிப்பு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

இதன் மூலம் தேசியமாணவர் படை மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, வாகனம் ஓட்டும் திறமை, வானூர்தி பயிற்சி பெற்ற உணர்வு மற்றும் அசல் துப்பாக்கியால் சுடும் உணர்வுகளை பெறும் வாய்ப்பு கிட்டும். மதுரை இடையபட்டியில் அமைக்கப்பட்டு வரும் தேசிய மாணவர் படை பயிற்சி அகாடமியில் வாகன ஓட்டுதல் பாவிப்பு, வானூர்தி பாவிப்பு, மற்றும் ஆயுத பாவிப்பு ஆகிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும். இது போன்ற பயிற்சி இந்தியாவிலேயே முதன் முறையாக இங்கு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இளைஞர்கள் தங்களது வேலை வாய்ப்பினை அதிகரித்துக்கொள்ள, தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியமானதாகும். எனவே, தேசிய மாணவர் படை பயிற்சி அகாடமியில் மொழி ஆய்வுக் கூடம் ஒன்றும் அமைக்கப்படும். இவை 1 கோடி ரூபாய் செலவில்அமைக்கப்படும் என ஜெயலலிதா வாசித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.