Home Blog Page 5854

வெள்ள நிவாரணம் வழங்குவதில் மன உளைச்சல்: கிராம உதவியாளர் தற்கொலை

கடலூர்:
ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ள நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட மனஉளைச்சலால் கிராம உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை அடுத்து கிராம உதவியாளர் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் வடக்குப் பாளையத்தைச் சேர்ந்தவர் த.ராஜாராமன் (52). சோழதரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவரை சிலர் திட்டியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ராஜாராமன் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது மனைவி லட்சுமி (52) கொடுத்த புகாரின் பேரில் சோழதரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ராஜாராமனுக்கு தர்மவீரன்(24), ஆனந்தஜோதி(22), ராஜேஷ்(19) ஆகிய 3 மகன்களும், திவ்யபாரதி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இறந்த ராஜாராமனின் உறவினர்கள் ஒன்று திரண்டு பாளையங்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே காட்டுமன்னார்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இவ்வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேசிய இளைஞர் தினத்தில் டாஸ்மாக் கடைகளை மூட போராடிய 29 பேர் கைது

தஞ்சாவூர்:

தேசிய இளைஞர் தினம் என்று கொண்டாடப் படும் விவேகானந்தர் பிறந்த நாளில் (ஜன. 12) மதுபானக் கடைகளை மூடக் கோரி, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைக்கு செவ்வாய்க்கிழமை பூட்டுபோட முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 29 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூரில் இந்து மக்கள் கட்சியினர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவையாறு நிறுத்தத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர். விவேகானந்தர் பிறந்த தினத்தில் டாஸ்மாக் கடையைத் தமிழக அரசு மூட வேண்டும். இளைஞர்களைச் சீரழிக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி வந்த இவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி, கடைக்குள் செல்ல முயன்ற அக்கட்சியைச் சேர்ந்த 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அது போல்,ம் கும்பகோணத்திலும் போராட்டம் நடைபெற்றது. மடத்துத் தெருவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டமும், தர்னாவும் நடைபெற்றது.பின்னர், உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. கைகளில் பூட்டை ஏந்தியபடி ஊர்வலமாக டாஸ்மாக் கடைக்கு சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் புதிதாக 126 இ-சேவை மையங்கள் திறப்பு

சென்னை:
சென்னையில் புதிதாக 126 இணைய சேவை மையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் இணைய சேவை மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்திவருகிறது.

முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த மையங்களில், அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர், கழிவுநீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தலாம். அரசின் நலத் திட்ட உதவிகளையும், இதர சேவைகளையும் பெறலாம்.

இந்த நிலையில், சென்னை மாநகரில் உள்ள 126 வட்ட அலுவலகங்களில் புதிதாக 126 அரசு இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், காணொலிக் காட்சி முறையில் இந்த மையங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் கு. ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலர் தா.கி. ராமச்சந்திரன், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மையங்களின் மூலம், வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த் துறையின் 16 சேவைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் உள்ளிட்ட சமூகநலத் துறையின் 13 சேவைகள், ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை தொடர்பான 6 சேவைகள், சென்னை மாநகராட்சியின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி செலுத்துதல், பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெறுதல் ஆகிய 4 சேவைகள், அரசின் இதர திட்டங்களான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசுப் பணி தேர்விற்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட 54 சேவைகளைப் பெறலாம்.

அனைத்து அரசு இணைய சேவை மையங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தைச் செலுத்தும் வசதியையும் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

சென்னை மாநகரில் இணைய சேவை மையங்கள் வாயிலாக இதுநாள் வரை சுமார் 1 கோடியே 15 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பவானி சாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை :

பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் மற்றும் நீட்டிப்பு கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு இரண்டாம் பருவ புன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் மற்றும் நீட்டிப்பு கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் நிலங்களுக்கு இரண்டாம் பருவ புன்செய் பாசனத்திற்கு 13-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குமரி அருகே ரூ.1 லட்சத்துக்கு 5 மாத குழந்தை விற்பனை: 4 பேர் கைது

நாகர்கோவில்:

குமரி அருகே ரூ.1 லட்சத்துக்கு 5 மாத குழந்தையை விற்பனை செய்ததாக தந்தை உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது…

கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் கீழச்சாலையை சேர்ந்த தம்பதி வரதராஜன் (42) அமலா (37). இவர்களுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கடந்த மாதம் 31ஆம் தேதி வரதராஜன், 5 மாத ஆண் குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார். அந்தக் குழந்தையை தத்தெடுத்து வந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2 நாட்களாக அந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. இதனால் அருகில் உள்ளவர்கள், நாகர்கோவிலில் உள்ள குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தைகள் உதவி மைய பணியாளர் மேரிபெனி நேரில் சென்று விசாரித்தபோது வரதராஜன் அந்தக் குழந்தையை ரூ.1 லட்சம் கொடுத்து வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டருக்கு மேரிபெனி தகவல் கொடுத்தார். அதன் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போது,அந்தக் குழந்தை கொட்டாரம் லட்சுமிபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (23)-மாரி மணிமாலா (21) தம்பதியரின் குழந்தை என்றும், இவர்களுக்கு சூர்யா (1½) மற்றும் நிதிஷ்குமார் (5 மாதம்) ஆகிய ஆண் குழந்தைகள் உள்ளதாலும், கட்டடத் தொழிலாளியான சதீஷ்குமார் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்ததாலும், குழந்தையை விற்றது தெரியவந்தது. இதற்கு ஒரு புரோக்கர் கும்பல் சதீஷ்குமாரை சந்தித்து ரூ.1 லட்சம் பணத்துக்கு குழந்தையை விற்குமாறு ஆசை வார்த்தை கூறியதும், அதன்படி வரதராஜன் ரூ.1 லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கியதும் தெரியவந்தது.

இது குறித்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவிட்டதன் அடிப்படையில் தென்தாமரைகுளம் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். குழந்தையை விற்ற சதீஷ்குமார், அதனை வாங்கிய வரதராஜன், இதற்கு உதவியாக இருந்த அவருடைய உறவினர் சரவணந்தேரியை சேர்ந்த தங்கநாடார் (66), லட்சுமிபுரத்தை சேர்ந்த புரோக்கர் ஆதிலிங்கம் (37), அவருடைய மனைவி விமலா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர்களில் சதீஷ்குமார், வரதராஜன், தங்கநாடார், விமலா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆதிலிங்கம் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். விற்பனை செய்யப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜெருசலேம் புனிதப் பயண நிதி உதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ. 20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நிதியுதவி பெற, வரும் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயோ சமுத்திரம், கிறிஸ்தவ மதத் தொடர்புடைய புனிதத் தலங்களை உள்ளடக்கிய பயணத்துக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்து வருகிறது. வரும் மார்ச் மாதம் முதல் ஜூன் வரை புனிதப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இப் பயணத்துக்கு, தகுதியானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். மேலும், w‌w‌w.bc‌m​b​c‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 1.1.2016ஆம் தேதியில் ஓராண்டு செல்லத்தக்க வகையிலான பாஸ்போர்ட் உள்ளவராக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள மருத்துவ, உடல்தகுதி உடையவராக இருக்க வேண்டும். பயணத்துக்கான செலவில் அரசு வழங்கும் ரூ. 20 ஆயிரம் நீங்கலாக மீதமுள்ள தொகையைச் செலுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒரே குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் 4 பேர் பயணம் செய்யலாம். 70 வயது நிறைவடைந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உடன் துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லவும் அனுமதிக்கப்படும். மாவட்ட வாரியாக உள்ள கிறிஸ்தவ மக்கள்தொகை அடிப்படையில், கணினி மூலம் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவோர் அரசால் தேர்வு செய்யப்பட்ட பயண முகவர்கள் மூலமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையின் மேல் ஜெருசலேத்துக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு இம் மாதம் 25ஆம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டிய முகவரி: மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, 5ஆவது தளம், அண்ணா சாலை, சென்னை 2.

காங்கிரஸ் தனித்து நின்றால் இளங்கோவனே முதல்வர்: குஷ்பு

தருமபுரி:

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், ஈவிகேஎஸ் இளங்கோவனே முதல்வர் என்று கூறினார் குஷ்பு.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சார கூட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளது. திருவாரூரில் திங்கள் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வாக்கு வங்கி 40 சதவீதமாக உயர்ந்து, தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்றார். மேலும், 2016-இல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது, மத்தியில் ராகுல் காந்தியை பிரதமராக்குவதே காங்கிரஸின் லட்சியம் என்றும் கூறினார்.

இந்நிலையில் தருமபுரியில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, காங்கிரஸ் எங்க தயவு இல்லாம யாரும் ஆட்சிக்கு வரமுடியாது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் தமிழக முதல்வர் என்று பேசினார். அதைக்கேட்டு மேடையில் இருந்த காங்கிரசார் மட்டுமல்ல ஈவிகேஎஸ் இளங்கோவனே கூட ஷாக் ஆகித்தான் போகிறார்.

அரசு சரியான நடவடிக்கை எடுக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை:

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது மிகவும் ஏமாற்றமானது, நீதிமன்ற உத்தரவைப் படித்த பின்னர் மத்திய அரசு சரியான நடவடிக்கையை எடுக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் போட்டி நடத்தும் பிற மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “நீதிமன்ற தீர்ப்பு மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை படித்த பின்னர் மத்திய அரசு சரியான நடவடிக்கையை எடுக்கும்” என்று கூறினார்..

மேலும், இது குறித்து விவாதிக்க, நாளை தில்லி செல்வதாகவும், அதற்கான சரியான அதிகாரிகளிடம் இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாகவும் கூறினார்.

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பிய கடிதத்தில்,

”நான் கடந்த டிசம்பர் 22-ம் தேதி, தமிழகத்தல் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கான அவசர சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் மூலம் கோரியிருந்தேன்.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு கடந்த 7-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பு அடிப்படையில், ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டங்களில் ஏற்பாடுகளை செய்யும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்டவர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வெளியிட்ட அறிவிப்புக்கு இன்று உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், அந்த அறிவிப்பு அடிப்படையில் ஜல்லிக்கட்டை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழக கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியுடன் நெருக்கமான தொடர்புடைய தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பது அவசியம். எனவே, இப்பிரச்சினையின் அவசரத்தை உணர்ந்து, உடனடியாக மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். தமிழக மக்கள் சார்பாக இந்த விவகாரத்தில் தங்களது உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.

சபரிமலைக்கு பெண்கள் செல்வதா?: ஆலய மரபுகளில் தலையிடுவது ஆபத்து: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை:

சபரிமலைக்கு பெண்கள் செல்வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆலய மரபுகளில் தலையிடுவது ஆபத்து என்று கூறினார்.
மேலும், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு குறிப்பிட்ட வயதுக்கு கீழும், குறிப்பிட்ட வயதுக்கு மேலும் உள்ள பெண்கள் செல்லலாம் என்ற விதிமுறை வைக்கப்பட்டுள்ளது. கோவில் இருக்கும் இடத்தின் தன்மையைப் பொறுத்து சில விதிமுறைகள் வகுக்கப்படுகிறது. சபரி மலைக்கு செல்லும் பாதை அடர்ந்த காட்டுவழி. அந்த பாதை பெண்களுக்கு உகந்தது அல்ல என்பதால் வயது வரம்பை நிர்ணயித்து இருக்கிறார்கள்.

என்னென்ன விரதம்? எப்படியெல்லாம் கடை பிடிக்கப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். முக்கியமாக தன்னை கட்டுப்படுத்துதல். மாலை அணிந்து பக்தர்கள் வீட்டில் கூட பல கட்டுப்பாடுகளை வைத்துள்ளார்கள். அசைவ உணவை வெறுக்கிறார்கள். அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் அதை ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களிடம் அசைவ உணவை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்த முடியுமா?

அய்யப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் கட்டுப்பாடுகள் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. பிற மதங்களிலும் பல கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதைப் பற்றி விமர்சிக்கவோ, தலையிடவோ அதிகாரம் இல்லை. அதே போல் இந்துக்கள் வழிபாட்டு முறைகளையும் மீறக்கூடாது என்று சொல்வதில் என்ன தவறு? வழிபாட்டு முறைகளில் தலையிடும் போது கவனமாக செயல்பட வேண்டும். எந்த அய்யப்ப பக்தரும் தனது மனைவியை உடன் அழைத்து செல்ல வேண்டும் என்று உரிமை கோருவதில்லை. நாத்திகவாதிகள், பொதுவுடமைவாதிகள் தலையிட எந்த உரிமையும் இல்லை.

ஒரு அரசியல் கட்சியில் உறுப்பினர் மட்டும்தான் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கிடைக்கும். சம்பந்தம் இல்லாதவர்களை அனுமதிப்பார்களா? சில இடங்களில் பெண்கள் மட்டுமே வழிபடும் உரிமை உள்ளது. அங்கு ஆண்கள் செல்லமுடியாது. அய்யப்பன் கோவில் ஒன்றும் சுற்றுலாத்தலம் இல்லை. அங்கு செல்ல சுயக்கட்டுப்பாடு தேவை.

எரிமேலியில் வாவர் தர்காவுக்கு இருமுடி கட்டு சுமந்தபடி அய்யப்ப பக்தர்கள் செல்கிறார்கள். அதற்காக ஏனைய தர்காகளிலும் அப்படி செல்வோம் என்று அடம் பிடிக்க முடியுமா? அனுமதிப்பார்களா? விதண்டாவாதிகளால் பிரச்னைதான் ஏற்படுகிறது என்றார் அவர்.