சென்னை : பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வழங்கும் தேதியை அண்ணா பல்கலைக் கழகம் நீட்டித்துள்ளது. பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு மே 16, 17ஆம் தேதிகளில் நடக்கிறது. நேரடியாக விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பு மையங்களான, சென்னை, கோவை, சிதம்பரம், திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மையங்களில் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒருங்கிணைப்பு மையத்தில் 29ஆம் தேதி வரை நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அண்ணா பல்கலை.,யின் இணைய தளத்தை அணுகலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
10 கோடியைத் தாண்டியது பாஜக உறுப்பினர் எண்ணிக்கை
புது தில்லி : பா.ஜ.க, உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அளவில் பா.ஜ.க, உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்று 10 கோடியைத் தாண்டி உள்ளது. இதனை அக்கட்சி தெரிவித்தது.
வருமான வரி கட்டுபவர்களுக்கு மேலும் இடி
புது தில்லி: வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் தங்களின் வங்கிக் கணக்குகள் குறித்த அனைத்து விவரங்களையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் இருந்தால், அது தொடர்பான வங்கிக் கணக்கு விவரங்களை ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு, அதில் வைத்திருக்கும் வைப்புத் தொகை ஆகியவை குறித்த விவரங்களையும் அதில் இணைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.பி., அதிமுக செய்தித் தொடர்பாளரா?: ராமதாஸ் ஆச்சரியம்
நீதிபதி வகேலா, ஜெயலலிதாவுக்காக மாற்றப்படவில்லை என்று கூறிய எஸ்.ஆர்.பி., எப்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக மாறினார் என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்திய ஆச்சரியம்….
நீதிபதி வகேலா ஜெயலலிதாவுக்காக மாற்றப்படவில்லை: எஸ்.ஆர்.பி- அட… இவர் எப்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக மாறினார்? — Dr S RAMADOSS (@drramadoss) April 18, 2015
லஞ்ச லாவண்யத்தில் காட்டும் அக்கறையை சுகாதாரத்தில் காட்ட வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
சென்னை: தமிழகத்தில் ஆட்சியாளர்கள் லஞ்ச லாவண்யத்தில் காட்டும் அக்கறையை சுகாதார சீரமைப்பில் காட்ட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களில் 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்கிற சோக சம்பவம் நடந்துள்ளது மிகுந்த வேதனையை தருகிறது. இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நர்சுகள் பணியாளர்கள் இல்லாததோடு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஒரு அவலநிலை அங்கு உள்ளது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏழைஎளிய மக்கள் உயர் சிகிச்சைக்காக இங்குதான் வர வேண்டிய நிலை உள்ளது. ஒரே நாளில் 40 முதல் 70 பிரசவங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன. இந்த பிரசவங்களை செய்வதற்கு உரிய மருத்துவ வசதிகள் அங்கு இல்லாதது மிகுந்த வெட்கக்கேடானது. நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள் செயற்கை சுவாச கருவிகள் மருந்துகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற எந்த வசதிகளும் ஏற்படுத்தாதது தான் பச்சிளம் குழந்தைகளின் பரிதாப சாவுக்கு காரணம். இதேபோல பச்சிளம் குழந்தைகளின் இறப்பு சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்ததையொட்டி தமிழக ஆட்சியாளர்கள் உரிய பாடம் கற்றதாகத் தெரியவில்லை. பொதுவாக தமிழ்நாட்டில் ஓரு ஆட்சி நடக்கிறதா என்கிற கேள்விக்குறி நாட்டு மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. அதை விழுப்புரம் பச்சிளம் குழந்தைகளின் பரிதாப சாவு உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தான் நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள தாய்மார்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளன. கிராமப்புறங்களில் வாழ்கிற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு நுண்ணூட்டச் சத்து வழங்குவதற்காக மத்திய காங்கிரஸ் அரசு தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தை தொடக்கி வைத்தது. இதை உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருக்கிற சுகாதார அமைப்புகள் பாராட்டி வரவேற்றுள்ளன. ஆனால் அந்த திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாமல் உள்ளது. தமிழகத்தில் சுகாதாரத்துறை லஞ்ச லாவண்யத்தில் மூழ்கி சீரழிந்து வருவதால் மருத்துவ மனைகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதில் தமிழக சுகாதாரத்துறை முற்றிலும் தோல்வியடைந்து விட்டது. நேற்று தருமபுரி இன்று விழுப்புரம் என அப்பாவி பச்சிளம் குழந்தைகளின் சாவுகள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த சாவுகளுக்கு பொறுப்பேற்காமல் தமிழக அரசு தப்பிக்க முடியாது. மருத்துவ வசதிக்காக வந்த குழந்தைகளின் தாய்மார்கள் இறந்த குழந்தைகளின் சடலங்களை தூக்கிக் கொண்டு தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய அவலநிலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய குழந்தை சாவுகளுக்கு சம்மந்தப்பட்ட அமைச்சரையும் மருத்துவமனை அதிகாரிகளையும் விரிவான விசாரணைக்கு உட்படுத்துவதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்க முடியும்.
வி.ஐ.பி.க்கள் பறந்து ஏர் இந்தியாவுக்கு ரூ. 600 கோடி பாக்கி
ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவர்கள் மேற்கொண்ட பயணங்களின் வகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு செலுத்த வேண்டிய கட்டண பாக்கி ரூ.600 கோடி அளவுக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சகங்களின் கவனத்துக்கு கடிதம் மூலம் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் எடுத்துச் சென்றுள்ளது. பல கோடி ரூபாய் நஷ்டம் காரணமாக மூழ்கும் நிலையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தற்போது ரூ.40 ஆயிரம் கோடி கடன் உள்ளதாம் . தொடர்ச்சியாக சந்தித்த நஷ்டங்களுக்கு பின்னர், கடந்த டிசம்பரில்தான் இந்த நிறுவனம் ரூ.14.6 கோடி நிகர லாபம் ஈட்டியதாக முன்னர் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஆப்கன் குண்டுவெடிப்பில் 22 பேர் பலி
ஆப்கனின் கிழக்குப் பகுதி நகரமான ஜலாலாபாதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 பேர் காயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு, வங்கி ஒன்றின் வெளியில் நிகழ்ந்ததாக, நங்கபர் மாகாணத்தின் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் வந்த தற்கொலைப் படையைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்தத் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது, அரசு ஊழியர்களும் ராணுவ வீரர்களும் தங்களது ஊதியத்தைப் பெறுவதற்காக நியு காபூல் பேங்க் என்ற அந்த வங்கிக்கு வெளியில் காத்திருந்தனராம். அப்போது, இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இன்று காலை ஜலாலாபாதில் ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு அருகிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
திருப்பூர் எம்.ஏ. சத்தார் காலமானார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில செயலாளரும், ஈமான் தமிழ் இலக்கிய பேரவை தலைவரும் , தமிழ்நாடு ஹஜ்கமிட்டி முன்னாள் உறுப்பினருமான திருப்பூர் எம்.ஏ. சத்தர் 17.04.2015 இரவு 10.15 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 73 அவரது உடல் நல்லடக்கம் 18.04.2015 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை-21 மின்ட் மார்டன் சிட்டி 3வது பிரதான வீதி, 68ஆம் இலக்க இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு பழைய வண்ணாரப்பேட்டை பெரிய மார்க்கெட் அருகில் உள்ள கபரஸ்தானில் 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்ட தகவலில் இதைத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா விடுதலைக்குப் பின்னரே பதவி உயர்வுக் கோப்புகள் நகரும்? : ஸ்டாலின் விமர்சனம்
ஜெயலலிதா விடுதலைக்காக பொதுப்பணித் துறை அதிகாரிகள் பதவி உயர்வுக் கோப்புகளை கிடப்பில் போட்டிருக்கும் குறுகிய அரசியல் மனப்பான்மை நிலவுகிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ள செய்தியில்,,
“ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற பிறகு தான் பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முடிவு செய்து இருப்பதால் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்.
பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்படும். இந்த முறை நிர்வாக பொறியாளர் பதவிக்கு 45 பேருக்கும் மேற்பார்வை பொறியாளர் பதவிக்கு 22 பேருக்கும் பதவி உயர்வு பட்டியல் தயார் செய்து ஜனவரி மாதமே அனுப்பி விட்டார்கள். ஆனால் இதுவரை பதவி உயர்வு உத்தரவு வரவில்லை. இதனால் 33 நிர்வாக பொறியாளர் மற்றும் 13 மேற்பார்வை பொறியாளர் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அதன் காரணமாக பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அதிமுக அரசின் பொறுப்பு இல்லாத செயலாலும், பெரும் நிர்வாக சீர்கேட்டாலும் நிலவும் குழப்பத்தால் மக்கள் தங்களுக்கு வேண்டிய திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் அவதிப்படுகிறார்கள்.
குறுகிய அரசியல் மனப்பான்மை உடன் செயல்படாமல் தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உரிய நலத் திட்டங்களில் கவனம் செலுத்தும்படி அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்”
என்று கூறியுள்ளார்

