டாஸ்மாக் கடைக்கு மீண்டும், மீண்டும் குடிமகன்களை வரவழைப்பதற்காக சில்லறைக்கு பதில் டோக்கன் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், எடையூர் சங்கேந்தி மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. முக்கிய சாலையில் இருப்பதால் இந்த கடையில் எப்போதும் குடிமகன்களின் கூட்டம் அலைமோதும். மேலும், இங்கு மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக ரூ.5 வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபானங்கள் வாங்கும் குடிமகன்களுக்கு சில்லறைக்கு பதில், அந்த கடையின் எண் சீலிட்ட அட்டையை வழங்குகின்றனர். ஒரு அட்டையின் விலை ரூ.5. இரண்டு அட்டை வைத்திருந்தால் அதன் மதிப்பு ரூ.10. இந்த டோக்கன்களை குடிமகன்கள் அங்குள்ள பார்களிலோ அல்லது பக்கத்திலுள்ள பெட்டிக்கடையிலோ கொடுத்து அவர்களுக்கு தேவையான சைடிஸ் மற்றும் மற்ற பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அவர்கள் அந்த டோக்கன்களை மொத்தமாக டாஸ்மாக் கடையில் கொடுத்து பணத்தை வாங்கிக் கொள்வார்களாம். இந்த டோக்கன்களை மாற்றுவதற்காகவே மீண்டும், மீண்டும் மதுபானக் கடைக்கு வரவேண்டியுள்ளது என புலம்புகின்றனர் குடிமகன்கள். மேலும், இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதும் அவர்களின் கேள்வியாக உள்ளது.
- Home
- அடடே... அப்படியா?
- குடிமகன்களை மீண்டும் டாஸ்மாக் வரவைக்க புது உத்தி
