ரூ.1 லட்சம் தரணும்.. இல்லே கம்பெனிய கொளுத்திடுவேன்…! மிரட்டிய கட்டப் பஞ்சாயத்து விடுதலை சிறுத்தைக் கட்சி நிர்வாகி கைது!

Published:

pagalavan viduthalai siruthai - 2026

கரூர்: தொழிலதிபர் ஒருவரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெயரைக் கூறி ரூபாய் ஐம்பதாயிரம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது செய்யப் பட்டார்.

கரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்போது அதே கட்சியில் மாநில பொறுப்பு வகிக்கும் பகலவன் என்கிற பாஸ்கரன் வழக்கறிஞராகவும் உள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பசுபதிபாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் வினு பெட் என்னும் தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் சுரேஷ் பாலாஜி என்பவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரை கூறி ரூபாய் 50 ஆயிரம் கேட்டு பாஸ்கர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சுரேஷ் பாலாஜி என்பவர், தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு பாஸ்கர் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாருக்கு வழக்கறிஞர் பாஸ்கரை கைது செய்து விசாரிக்குமாறு உத்தரவு வந்துள்ளது.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

பாஸ்கர், கடந்த சில தினங்களாகவே கட்சிக்கு வேண்டும் என்று சொல்லி, அதிரடியாக வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது கரூர் அருகே தொழிற்பேட்டையில் உள்ள கொசுவலை, பஸ்பாடி, டெக்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்களில் கட்சிக்கு நிதி தராவிட்டால் கம்பெனியை கொளுத்திவிடுவேன் என்றும், இனி இங்கே தொழில் செய்ய முடியாது என்றும் ரூ 50 ஆயிரம் முதல் ரூ 1 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளார்.

இதையடுத்து வியாபாரிகள் மற்றும் தொழில் அதிபர்கள் பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப் படுகிறது. இந்நிலையில், முதல்வரின் தனிப்பிரிவில் அளிக்கப் பட்ட புகாரை அடுத்து, காவல்நிலைய ஆய்வாளர் சந்திரசேகர், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாஸ்கர் என்கின்ற பகலவனை கைது செய்தனர்.

இந்தக் கைது சம்பவத்தை அடுத்து கரூரில் வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img