சங்கர நேத்ராலயாவுக்கு கண் தானம் செய்த பெருந்தகை.. ஐராவதம் மகாதேவன்!

Published:

 

airavatham mahadevan sankaranethralaya3 - 2026

தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்த ஒரு மாபெரும் ஆளுமை காலமானார். ஐராவதம் மஹாதேவன் அவர்களை “தினமணி” – நாளிதழின் ஆசிரியராகவே அறிந்தவன். அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் பணியாற்றிய போது, அவர் அங்கே சிகிச்சை பெற்று வந்த ஒரு நண்பரைக் காண வந்தார். அப்போது அவருக்கு நான் அறிமுகம் ஆனேன்.

அவருடைய நண்பரை பணிநிமித்தம் நேர்முகம் செய்து கொண்டிருந்த போதும், அவருக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த போதும், அமைதியாகக் காத்திருந்தவர், என்னுடனும் சில நிமிடங்கள் உரையாடினார்.

ஒரு நோயாளியின் உறவினர் என்றே நினைத்துப் பேசிய என்னிடம், விடைபெறும் தறுவாயில்தான் “மஹாதேவன் – ஐராவதம் மஹாதேவன்” – என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். நான் பெற்ற மாபெரும் பேறு.

பின்னர் சங்கர நேத்ராலயாவின் பணிக்கு வந்த பிறகு, என் குருநாதர் நான் எழுதிய “புதிய பார்வை” நூல் பிரதி ஒன்றை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு வரும்படி பணிக்க, அவ்வாறே சென்றேன். அறையில் அமர்ந்திருந்தவர் “ஐராவதம் மஹாதேவன்” அவர்கள்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
airavatham mahadevan sankaranethralaya2 - 2026
ஐராவதம் மகாதேவன் …. சங்கர நேத்ராலயாவின் பரங்கிமலை கம்ப்யூனிட்டி ஹாஸ்பிடல் பூமி பூஜையில் கலந்து கொண்ட போது… (படம்: ஏ.பி. இருங்கோவேள்)

என் குருநாதர் மீண்டும் அறிமுகம் செய்து வைக்க, “இருங்கோவேளை” தெரியுமே, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சந்தித்திருக்கிறேனே, நலமா?” – என்று கரம் குலுக்கி விசாரித்தார்.

என் “புதிய பார்வை” – நூலைப் பெற்றுக்கொண்டு ஆசீர்வதித்தவர், தனது கண்களை தானமாக வழங்க வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். விவரம் கேட்டவரிடம் சொன்னேன். அன்றே, தனது கண்களை தானமாக அளிக்க உறுதி எடுத்துக் கொண்டார். மேன்மக்கள் என்றும் மேன் மக்களே!.

வாழ வேண்டிய வயதில் அமரராகிப் போன தன் மகன் “அமரர் வித்யாசாகர்” நினைவாக சங்கர நேத்ராலயாவின் “உயிரிதொழில் நுட்பம் மற்றும் அடிப்படை அறிவியல் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் நன்கொடை அளித்தார்.

airavatham mahadevan sankaranethralaya - 2026
ஐராவதம் மகாதேவன் …. சங்கர நேத்ராலயாவின் பரங்கிமலை கம்ப்யூனிட்டி ஹாஸ்பிடல் பூமி பூஜையில் கலந்து கொண்ட போது… (படம்: ஏ.பி. இருங்கோவேள்)

தன் மகன் பெயரில் சங்கர நேத்ராலயாவில் துலங்கும், “வித்யாசாகர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பயோ டெக்னாலஜி அண்ட் பேசிக் சயின்ஸ்” – நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டார். சமீபத்தில் பரங்கிமலையில் கட்டப்பட்டு வரும் சங்கர நேத்ராலயாவின் கம்ப்யூனிட்டி மருத்துவமனையின் பூமி பூஜையிலும் கலந்து கொண்டு நன்கொடை வழங்கினார்.

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

ஆம், இன்று அவரது கண்களை தானமாக அளித்துவிட்டு அமரராகி விட்டார். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு என்னிடம், தனது கண் தான உயிலை வழங்கியவர், இன்று தன் கண்களை தானமாக சங்கர நேத்ராலயாவின் கண் வங்கிக்கு வழங்கி விட்டு, விண்ணுலகில் கண்ணிமைக்கா தேவராகிப் போனார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மாமேதை ஐயா ஐராவதம் மஹாதேவனின் ஆன்மா எல்லாம் வல்ல அந்த மஹாதேவனின் திருவடிகளில் இளைப்பாறட்டும்”

– ஏ.பி. இருங்கோவேள் 

மேலாளர் – பயனாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை. சங்கர நேத்ராலயா, சென்னை.

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img