December 8, 2024, 12:20 PM
30.3 C
Chennai

ஆபத்துக்கள் நீக்கும் ஆபத்பாந்தவன்..!

தொண்டைமான் என்ற மன்னன் நாட்டு நன்மைக்காக ஒரு யாகம் செய்ய ஆசைப்பட்டான். தனது விருப்பத்தைத் தன் புரோகிதரான ஜடாதாரியிடம் சொன்னான். அவரும் சம்மதித்தார்.

ஜடாதாரியோ தீய எண்ணத்துடன் ஒரு துர்தேவதையைக் குறித்து யாகம் செய்து நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கத் திட்டமிட்டார்.

அந்த யாகத்துக்கு அனைத்து ரிஷிகளையும் வரவேற்கும்படி ஜடாதாரியிடம் மன்னன் கூறினான்.
அவரும் நாராயண ரிஷி உட்பட அனைத்து ரிஷிகளையும் நேரில் சென்று வரவேற்றார்.
ஆனால் நாராயண ரிஷி மட்டும் திருமலையப்பன் அருளால் இவர் ஏதோ தீய எண்ணத்தில் யாகம் செய்கிறார் என உணர்ந்து கொண்டார்.

அதனால் யாகத்துக்கு வர மறுத்துவிட்டார். மேலும், இந்த யாகத்தால் நாட்டுக்குத் தீங்கு ஏற்படாமல் காக்குமாறு மலையப்பனை வேண்டினார்.

நாராயண ரிஷியால் தனது திட்டத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என உணர்ந்த ஜடாதாரி அவரைப் பற்றி அவதூறாக மன்னனிடம் பலவாறு கூறினார்.

தொண்டைமான் என்ன பெரிய மன்னனா? அவன் செய்யும் யாகத்துக்கு நான் வர வேண்டுமா? மன்னன் என் காலில் வந்து விழுந்து வரவேற்றால் தான் வருவேன்!” என்றெல்லாம் கர்வத்துடன் நாராயண ரிஷி பேசுவதாகக் கூறிய ஜடாதாரி, “மன்னா! அவருக்கு நீங்கள் தான் சரியான தண்டனை அளித்துத் தாங்கள் யாரென்று காட்டவேண்டும்!” என்றார்.

ALSO READ:  சபரிமலை புதிய மேல்சாந்தி தேர்வு!

கோபம் கொண்ட மன்னன், தனது வீரர்களை அனுப்பி நாராயண ரிஷியை இழுத்து வரச் சொன்னான்.
அவர்களும் ரிஷியை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். “இந்த நாட்டை ஆளும் மன்னன் நான்!

எனக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?
மரியாதையாக இந்த யாகத்தில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!” என்றான் மன்னன்.
“இந்த யாகம் செய்வது நாட்டுக்கு நல்லதல்ல. ஏதோ துர்தேவதையைக் குறித்து ஜடாதாரி யாகம் செய்கிறார்.
நான் இதில் பங்கேற்க மாட்டேன்!” என்றார் ரிஷி.

அவரது விளக்கத்தை ஏற்காத தொண்டைமான்,
“இறுதியாகச் சொல்கிறேன். மன்னனின் ஆணைக்கு அடிபணிவீரா? மாட்டீரா?” என்றான். “நீ இந்த ஒரு தேசத்துக்குத் தான் அரசன் . மன்னா….என் ஏழுமலையானோ அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகன்.
அந்த மன்னாதி மன்னனைத் தவிர வேறு எந்த மன்னனையும் நான் கணிசிக்க மாட்டேன்!” என்றார் ரிஷி.

அவரைச் சிறையிலடைத்தான் தொண்டைமான்.சிரித்துக் கொண்டே, “திருவேங்கடமுடையானின் அடியார்களுக்குச் சிறைச்சாலை
கூட தங்க மாளிகை போல மின்னும். மூங்கில் கழிகள் கூட அவர்களுக்குக் கரும்பு போல் இனிக்கும்!” என்றார் நாராயண ரிஷி.

ALSO READ:  ஜனகை மாரியம்மன் கோயிலில் விஜயதசமி அம்பு எய்தல்!

அப்படியா? அப்படியானால் உங்கள் அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகனிடம் சொல்லி இந்தச் சிறையைத் தங்கமாக மாற்றச் சொல்லுங்கள்.
மூங்கில் கழிகளைத் தருகிறேன், நீங்கள் அதைக் கரும்பாய்க் கருதிச் சாப்பிடுங்கள்.
இவை இரண்டும் நாளை காலைக்குள் நடக்காவிட்டால், உங்கள் தெய்வத்தை இனி
அகிலாண்டங்கோடி பிரம்மாண்ட நாயகன் என்று அழைக்கக் கூடாது!” என்றான்.

மூங்கில் கழிகளை அவரது சிறைக்குள் கொண்டு வந்து போடச் சொல்லி உத்தரவிட்டு விட்டுத் தன் அந்தப்புரத்துக்குச் சென்றான்

அன்றிரவு திருமலையப்பன் தனது பக்தனான கஜேந்திரனைச் சிறைச்சாலைக்கு அனுப்பினார்.
கஜேந்திரன் வந்து அனைத்து மூங்கில்களையும் எளிதில் தின்று தீர்த்தார். தன் திருமார்பில் உள்ள மகாலட்சுமியிடம்
அந்தச் சிறைச்சாலையைக் கடாட்சிக்கும்படி கூறினார் மலையப்பன். மகாலட்சுமியின் பார்வை பட்டதும் சிறைச்சாலை பொன் மயமானது.

அடுத்தநாள் காலை வந்து பார்த்த மன்னன், மூங்கில் கழிகள் அனைத்தும் காணாமல் போனதையும்,
சிறைச்சாலை முழுவதும் தங்கமயமாக இருப்பதையும் கண்டு வியந்து திருமலையப்பனின் மேன்மையையும்,
நாராயண ரிஷியின் பக்தியின் பெருமையையும் உணர்ந்தான்.

ALSO READ:  திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரண வழிபாடு!

ஜடாதாரி செய்ய நினைத்த யாகத்தை நிறுத்தினான். அன்று முதல் தொண்டைமான் திருமலையப்பனின் பக்தனாக மாறினான்.
நாராயண ரிஷி போன்ற உண்மையான பக்தர்களுக்கு ‘ஸத்’ என்று பெயர்.

ஸத் ஆன பக்தர்களுக்கு எப்போதும் உதவுபவனாகத் திகழ்வதால் திருமால் ‘ஸத்ய:’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 107-வது திருநாமம்.

ஸத்யாய நம: என்று தினமும் சொல்லி வரும் அடியார்களை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் திருமால் காத்தருள்வார்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week