மாட்டுப் பொங்கலில் சிவாலய நந்திகளுக்கு சிறப்பு பூஜை! காய்கனிகளில் ஜொலித்த தஞ்சை பெரிய நந்தி!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் தமிழகம்
tanjavoor nandhi - 2026

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு சிவன் கோவில்களில் வீற்றிருக்கும் நந்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தஞ்சைப் பெரிய கோவிலில் வீற்றிருக்கும் பெரிய நந்திக்கு காய்கனி அலங்காரம் செய்யப் பட்டு, நந்தீஸ்வரர் ஜொலித்தார்.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிவபெருமானுக்கு வாகனமாகத் திகழும் காளையாகிய நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்து, அலங்காரங்களைச் செய்து அன்பர்கள் வழிபட்டனர்.

நந்தீஸ்வரருக்கு சிறப்பிடம் கொடுத்த சிவாலயங்கள் சில தமிழகத்தில் பெரும் சிறப்புடன் கொண்டாடப் படுகின்றன. திருவிடைமருதூர் சிவாலயத்தில் நந்திக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப் பட்டிருந்தன.

தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு காய் கனிகளால் முழுதும் மறைக்கும் வகையில் அலங்காரம் செய்யப் படுவது வழக்கம். இந்த காய் கனி அலங்காரத்தை காண்பதற்காகவே பக்தர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு மாட்டுப் பொங்கல் நாளில் வருகைதருவர். இன்று நந்திக்கு ஆயிரம் கிலோ காய்கறிகள், பழங்கள், இனிப்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. 108 பசுக்களுக்கு கோ பூஜையும் நடைபெற்றது. பக்தர்கள் குடும்பம் குடும்பமாக பூஜை செய்தனர்.

tanjavoor nandhi2 - 2026

கும்பகோணத்தை அடுத்த கோவிந்தபுரத்தில் விட்டல் பாண்டுரங்க பஜனை ஆசிரமத்தில் 750க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு கோ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் கோ பூஜை செய்தனர்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் சூரியனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவறை முதல் ஆயிரம் கால் மண்டபம் வரை உள்ள 5 நந்திகளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று ஒருநாள் மட்டும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் காட்சி கொடுப்பதாக நம்பிக்கை. கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு இனிப்புகள், காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சிவபெருமானை மட்டும் வணங்கி அம்மனை வணங்காத பிருங்கி முனிவருக்கு வரம் கொடுத்த சிவபெருமானுடன் அம்மன் ஊடல் கொள்ளும் திருவூடல் விழா இன்று மாலை நடைபெற்றது.

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூரை அடுத்த குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோசாலையிலுள்ள 55 மாடுகளுக்கு 11 வகையான அபிஷேகங்களுடன் கோ பூஜை நடைபெற்றது.

மாட்டுப் பொங்கல் ஆன்மிக விழாவாக மட்டுமல்லாமல், சமூக விழாவாகவும் கொண்டாடப் படுகிறது. விவசாயிகள் தங்கள் விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகளை செய்து, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொங்கல் உணவு அளித்து மகிழ்ந்தனர்.

சேலம் கன்னங்குறிச்சியில் விவசாயிகள் மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி மாலை அணிவித்தனர். வீட்டின் முன் தரையில் கோலமிட்டுப் புதுப்பானையில் பொங்கலிட்டு படைத்து சூரியனையும் மாடுகளையும் வணங்கினர். மாடுகளுக்குப் பசும்புல், வாழைப்பழம் ஆகிய ஊட்டமுள்ள உணவுகளை வழங்கினர்.

சேலம் எடப்பாடி, சங்ககிரி சுற்றுவட்டார கிராமங்களில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மக்கள் பொங்கல் வைத்துப் படையலிட்டனர். ஆடு மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசியும், அலங்கரித்தும் பொங்கல் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சமத்துவபுரத்தில் மாட்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசியும் மாடுகளை அலங்கரித்த மக்கள் பொங்கலிட்டு வழிபட்டனர் பின்னர் கால்நடைகளுக்கு பொங்கல், பழங்கள் கொடுக்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.