சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்..

Published:

799259 sankaran kovil 2 - 2026

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் சங்கரன்கோவிலில் அருள்மிகு சங்கரநாராயண திருக்கோவிலும் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான் ஆடித் திங்கள் உத்திராட நன்னாளில் கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயணராகவும், ஸ்ரீ சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தவசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி அம்பாள் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆடித்தவசு திருவிழா நடைபெறவில்லை.

799261 sankaran kovil 1 - 2026
images 2022 07 31T143130.102 - 2026

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆடித்தவசு திருவிழா இன்று காலை கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் இன்று கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவி உமா மகேஸ்வரி உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஒன்பதாம் திருநாளான ஆகஸ்ட் 8 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா பதினோன்றாம் திருநாளான ஆகஸ்ட் 10 ஆம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு மேல் சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமியாக ரிஷப வாகனத்தில் தவசு காட்சி கொடுக்கிறார். இரவு 12 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி யாக யானை வாகனத்தில் காட்சி கொடுக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆடித்தவசு திருவிழா நடைபெற உள்ளதால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலும் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்போதே பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img