wife

கொரோனா வைரஸ் அச்சத்தில் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். இதனால் வீட்டிலிருக்கும் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக ஒரு தரவு சொல்கிறது. பெரும்பாலும் கணவன், மனைவிக்குள் பிரச்னைகள் உருவாகி அதுவே மோதலுக்கு வித்திடுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏற்காட்டைச் சேர்ந்த எஸ்டேட் கூலித் தொழிலாளி ஒருவரை உறவினர்கள் கைவிட்ட நிலையில் தன் மனைவிக்கு மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல் தவித்து வருகிறார். கடந்த வாரம் தன் மனைவியைத் தோளில் சுமந்து மலையேறிச் சென்று மருத்துவம் பார்த்தச் சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

ஏற்காட்டிலிருந்து 3 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது மயிலம்பட்டி. அங்கிருந்து 500 மீட்டர் செங்குத்தான பள்ளத்தில் அமைந்துள்ளது மதுரையாங்காடு. இப்பகுதியைச் சேர்ந்தவர் சின்னுசாமி. இவர் எஸ்டேட் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் கைவிட்ட நிலையில் வயதான சின்னுசாமியும், பார்வதியும் தனியாக வசித்து வருகிறார்கள்.

wife 3

இந்த நிலையில், பார்வதி தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதாவது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அழிந்து ரத்தச் சோகை ஏற்படும். அதனால் தொடர்ந்து அவருக்கு ரத்தம் செலுத்த வேண்டும். கடந்த வாரம் தன் மனைவிக்கு ரத்தச் சோகை ஏற்பட்டதால் தோளில் சுமந்து மலையைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்தவர்கள் சிலர் உதவி செய்து ராசிபுரம் மருத்துவமனைக்கு அனுப்ப ரத்தம் செலுத்தப்பட்டது.

இதுபற்றி எஸ்டேட் கூலித் தொழிலாளி சின்னுசாமி, “எனக்கும், என் மனைவி பார்வதிக்கும் திருமணமாகி 40 வருஷம் ஆயிடுச்சு. என் மகளை வெளியூரில் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். மகனுக்குக் கல்யாணமாகி பக்கத்தில் தனிக் குடித்தனம் இருக்கான். அவனுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த ஒரு உதவியும் செய்ய மாட்டான்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
wife 1

வயதான நானும் என் மனைவியும் தனியாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கடந்த ரெண்டு வருஷமாக என் மனைவி தலசீமியா நோயால் பாதித்து இருக்கிறாள். அதனால் எந்த ஒரு வேலை வெட்டியும் செய்ய முடியாது. நான் எஸ்டேட்டில் கூலி வேலை செஞ்சிட்டு வந்து என் மனைவிக்கு எல்லா பணிவிடையும் செய்வேன். 20 நாளைக்கு ஒரு முறை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தினால் உயிர் வாழ்வாள். இல்லைன்னா செத்துப் போயிடுவாள்.

ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்று ரத்தம் செலுத்துவதற்கு போக்குவரத்துச் செலவு, சாப்பாட்டுச் செலவு என 5,000 ஆகிறது. எஸ்டேட்டில் ஒரு நாளைக்கு 300 ரூபாய் கூலி தருவாங்க. அந்தக் கூலி என் மனைவிக்கு மாதம்தோறும் மருத்துவம் பார்க்கவே சரியாக இருக்கு. ஒரு லட்சம் செலவு செய்து ஆபரேஷன் பண்ணினால் குணமாயிடுமுன்னு மருத்துவர்கள் சொல்றாங்க. அந்தளவுக்கு என்னிடம் பண வசதி இல்லை.

wife 2
wife 2

ஊரடங்கு போட்டதால் என் மனைவியை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வாகனம் கிடைக்கவில்லை. அதனால் 2 கி.மீட்டர் மலையேறி என் மனைவியைத் தோளில் சுமந்து வந்தேன். அந்த வழியாகச் சென்ற பெருமாள் என்பவர் உதவி செய்ததால் ராசிபுரம் மருத்துவமனைக்குச் சென்று ரத்தம் செலுத்தி என் மனைவியைக் காப்பாற்றினேன்” என்றார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

இதுபற்றி பார்வதியிடம் கேட்டதற்கு, “எனக்கு அப்பா, அம்மா என எல்லாமே என் கணவர்தான். பணம் கூட கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை. என் மகன் பேசினால் நல்லா இருக்கும். ஆனால், சிலர் பேச்சைக் கேட்டுக்கொண்டு எங்களிடம் பேசுவதில்லை. என் வீட்டுக்காரர் ஒவ்வொரு நாளும் என் உயிரைக் காப்பாற்றி வருகிறார். எனக்குப் பிறகு அவரை யார் பார்த்துக் கொள்வாங்கன்னு பயமா இருக்கு” என்று கண்ணீர் வடித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending