
அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாளை உள்பட 60 வகையான மாம்பழங்கள் விளைச்சல்
ஏப்ரலில் சீசன் துவங்கியும் விற்க முடியாமல் வியாபாரிகள் திணறுகின்றனர். நடப்பாண்டு இதுவரை ஒரு மாம்பழம் கூட வெளிநாடுகளுக்கு செல்லவில்லை
கொரோனா ஊரடங்கு அமலால் விவசாயிகளும், வியாபாரிகளும் மாம்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். எனவே தமிழகத்தில் தபால் துறை மூலம் மாம்பழங்களை நேரிடையாக வீடுகளுக்கே அனுப்பி விற்பனை செய்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் மாம்பழம் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாளை, குதாதத், பங்கனபள்ளி, குண்டு உள்பட சுமார் 60 வகையான மாம்பழங்கள் விளைகின்றன. இங்கு பறிக்கப்படும் மாம்பழம் இந்தியாவில் பல பகுதிகளுக்கும், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.
நடப்பாண்டு கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலத்தில் ஏற்பட்ட தட்பவெப்பநிலை காரணமாக சரியான முறையில் மாம்பூக்கள் பூக்கவில்லை. இதன் காரணமாக இந்த சீசன் நேரத்தில் 60 சதவீதம் விளைச்சல் சரிந்துள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு, வழக்கமாக வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் மாம்பழம் விற்பனை நடப்பாண்டு சரிந்துள்ளது. அதபோல ஏற்றுமதியும் செய்யப்படவில்லை.
ஆனால் தெலங்கானா மாநிலத்தில், தபால்துறை மூலம் நேரடியாக பொதுமக்களின் வீடுகளுக்கே அனுப்பி விற்பனை செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று தற்போது சேலம் வியாபாரிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சேலத்தை சேர்ந்த மா விவசாயிகள் மற்றும் மாம்பழம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசனில் தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் டன் மாம்பழம் உற்பத்தி கிடைக்கும். சேலத்தில் இருந்து பல டன் மாம்பழங்கள் உள்ளூர் தேவைக்கும், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படும்.
நடப்பாண்டு மாம்பழம் சீசன் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கியது. தற்போது மாம்பழம் சீசனில் உச்சக்கட்டமாகும். ஆனால் மாம்பழத்தை விற்க முடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர். வழக்கமாக மாம்பழ சீசனில் தள்ளுவண்டிகள், சாலையோர கடைகள், கூடை வியாபாரம் மூலம் பல டன் வியாபாரம் நடக்கும். நடப்பாண்டு அந்த வியாபாரம் முற்றிலும் தடைபட்டுவிட்டது. இதை தவிர தபால்துறை, கொரியர் சர்வீஸ் மூலம் மாம்பழங்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும். நடப்பாண்டு அந்த பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசனில் பெங்களூர், ஹைதராபாத் உள்பட பல பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் பெட்டிகள் சேலத்தில் இருந்து விற்பனைக்கு அனுப்பப்படும். இ
தன் மூலம் வியாபாரிகளுக்கு பல கோடி வருவாய் கிடைக்கும். தற்போது பெங்களூர் மட்டுமே நமக்கு நேரடி தொடர்பில் உள்ளது. அதனால் அங்கு மட்டும் கொரியர் சர்வீஸ் மூலம் பார்சல் அனுப்பப்பட்டு வருகிறது. நடப்பாண்டு இதுநாள் வரை ஒரு மாம்பழம் கூட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவில்லை. தெலங்கானாவில் மாம்பழங்களை விற்பனை செய்ய தோட்டக்கலைத்துறை மற்றும் தபால்துறை கைக்கோர்த்துள்ளது.
அங்கு விவசாயிகளிடமிருந்து தோட்டக்கலைத்துறை நேரடியாக மாம்பழங்களை வாங்கி, தபால் பார்சல் சர்வீசில் பொதுமக்களுக்கு நேரிடையாக மாம்பழங்களை விற்பனை செய்து வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் தோட்டக்கலைத்துறை மற்றும் தபால்துறை இணைந்து விவசாயிகளிடமிருந்து நேரிடையாக மாம்பழங்களை பெற்று, பொதுமக்களிடம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் விவசாயிகள், வியாபாரிகள் நஷ்டத்தில் இருந்து மீள்வார்கள். எங்களுக்கு ஊரடங்கு காலத்தில் ஓரளவுக்கு வருமானமும் கிடைக்கும். இவ்வாறு விவசாயிகள், வியாபாரிகள் கூறினர்