மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

கிரைம் நியூஸ் தமிழகம்
thukku1 1

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தொட உள்ளது. புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்தான், இங்கு கடந்த 16-ம் தேதி, அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடியைச் சேர்ந்த 54 வயது ஆண், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சென்னையிலிருந்து கடந்த 15-ம் தேதிதான் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டதால், உடனே ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் மருத்துவமனையில் உள்ள கழிப்பறையில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார்.

கொரோனா நோயாளி கழிவறையில் தூக்கில் பிணமாகத் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனை கழிப்பறையிலேயே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக சென்னையில் பணிபுரிந்து வந்த இவர், சொந்த ஊருக்குத் திரும்பியும் நோயினால் ஊருக்குப் போக முடியவில்லையே என்று புலம்பியதுடன் விரக்தியிலிருந்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.