சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் பாதுகாப்பில் இருந்த ஆய்வாளர் உயிரிழப்பு

வீடியோ

சிக்கல் சிங்காரவேலர் ஆலய வேல்வாங்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் இருந்த வேளாங்கண்ணி காவல் ஆய்வாளர் சாமிநாதன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்காரவேலர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு மாவட்ட காவல்துறை சார்பாக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கோவிலின் உள்ளே கூட்டத்தை கட்டுப்படுத்திக்கொண்டு இருந்த வேளாங்கண்ணி ஆய்வாளர் சாமிநாதன் பணியில் இருக்கும்பொழுது திடீரென மயங்கி விழுந்தார்.

மயங்கி விழுந்த அவரை அங்கிருந்த காவலர்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால், எந்த அசைவும் இல்லாத காரணத்தால் ஆய்வாளர் சுவாமிநாதனை சக காவலர்கள் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் சக காவல் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வாளர் சுவாமிநாதன் உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் கிராமத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து, ஆய்வாளர் சாமிநாதன் பணியின்போது உயிரிழந்த சம்பவம் நாகை மாவட்ட காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.