கொரோனா.. இரண்டாம் அலையில் சிக்கும் நாடுகள்!

உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
corona spread worldwide

உலக அளவில் பெரும் உயிரிழப்புகளையும் மக்களின் உடல் உருக்குலைவையும் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று, ஊரடங்கு உத்தரவுகள், பொது முடக்கத்தால் ஓரளவு கட்டுப் படுத்தப் பட்டதாகக் கூறப் பட்டது. 

இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. 2வது அலை அபாயம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. 

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவின் இரண்டாவது அலை வீசும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த 10 நாடுகளில், கொரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா ஈரான், ஜேர்மனி, சுவிட்சா்லாந்து ஆகிய நாடுகளிலும் இரண்டாவது கொரோனா அலை வீசும் அபாயம் உள்ளது.

இதுதவிர, உக்ரைன், வங்காள தேசம், பிரான்ஸ், சுவீடன், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவற்றில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் அதிக தீவிரத்துடன் அமல்படுத்த ப்படுவதில்லை. இதன் விளைவாக, ஒவ்வொரு வாரமும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரமும் அதிகரித்து வருகிறது. இது, அந்த நோயின் இரண்டாவது பரவலுக்கு வித்திடும்.

இதனிடையே, அமெரிக்காவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகக் கூறப் பட்டுள்ளது. 

அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

corona worldwide
corona worldwide

டெக்சாஸ் மாகாணத்தில், கடந்த இரு வாரங்களில் பாதிப்பு, இரு மடங்காக உயர்ந்துள்ளது. கலிபோர்னியாவில், ஒரு வாரத்தில் புதிதாக, 7,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புளோரிடாவில், பாதிப்பு, 25 சதவீதம் உயர்ந்து 5,500 ஆக அதிகரித்துள்ளது.

ஹூஸ்டனில் மீண்டும் இரு அரசு மருத்துவமனைகளும்  நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அலபாமா, அரிசோனா மாகாணங்களிலும் ஒரு மாதத்திற்கு முன் இருந்ததை விட பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. 

இத்தகைய பரவல்களால், அமெரிக்காவின் பல மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.