டி20: அரையிறுதி வாய்ப்பை இழந்த அணிகள்!

உலகம் விளையாட்டு
icc t20 world cup
icc t20 world cup

ஐ.சி.சி டி20 பொட்டிகள் – 04.11.2021
– முனைவர் கு வை பாலசுப்பிரமணியன் –

வியாழக்கிழமையன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. இரண்டும் குரூப் 1 பிரிவு ஆட்டங்கள். முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-வங்கதேச அணிகள் விளையாடின. இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை-மேற்கு இந்தியத்தீவுகள் அணிகள் மோதின.

ஆஸ்திரேலியா-வங்கதேசம்

ஆஸ்திரேலிய அணி பூவாதலையா வென்றது. வங்கதேச அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. ஏழாவது ஓவரின் இரண்டாவது பந்து வீசுவதற்குள் ஐந்து வங்கதேச விக்கட்டுகள் விழுந்துவிட்டன. லிட்டன் தாஸ் (0), சௌம்ய சர்கார் (5), முஷ்ஃபிகுர் ரஹீம் (1), அஃபிஃப் ஹொசைன் (0) ஆகியோர் சோபிக்கவில்லை. மைக்கேல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், ஆடம் சாம்பா ஆகியோர் ஆஸ்திரேலியத் தரப்பில் மிகப் பிரமாதமாக பந்து வீசினர்.

ஆடம் சாம்பா நான்கு ஓவர் வீசி 19 ரன் கொடுத்து ஐந்து விக்கட்டுகள் வீழ்த்தினார். இதனால் வங்கதேச அணி 15 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 73 ரன் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றி அவர்களின் அணி மட்டையாடத் தொடங்கும் முன்னர் உறுதியாகிவிட்டது. ஆனால் புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடம் பெற இந்த 74 ரன்னை 8.1 ஓவர்களுக்குள் எடுக்க வேண்டும். இதனை ஆஸ்திரேலிய அணி 6.2 ஓவரில் எடுத்தது.

டேவிட் வார்னர் (18 ரன், 14 பந்துகள், மூன்று ஃபோர்கள்), ஆரூன் ஃபின்ச் (40 ரன், 20 பந்துகள், 2 ஃபோர், 4 சிக்ஸ்), மைக்கேல் மார்ஷ் (16 ரன், 5 பந்துகள், 2 ஃபோர், ஒரு சிக்ஸ்) நன்றாக விளையாடினார்கள்.

எனவே ஆஸ்திரேலிய அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாமிடத்திற்கு வந்துவிட்டது. முதலிடத்தில் இங்கிலாந்து அணியும் மூன்றாம் இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் உள்ளன.

அடுத்த சனிக்கிழமை, இறுதிப் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மேற்கு இந்தியத் தீவுகளையும், தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்தையும் சந்திக்கவிருக்கின்றன.

மேற்கு இந்தியத் தீவுகள்-இலங்கை

பூவாதலையா வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி இலங்கை அணியை முதலில் மட்டையாடச் சொன்னது. பவர்ப்ளேயில் இலங்கை அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 48 ரன் எடுத்து ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றது. முதல் 50 ரன்களை 38 பந்துகளிலும், அடுத்த 50 ரன்களை 33 பந்துகளிலும், அதற்கடுத்த 50 ரன்களை 31 பந்துகளிலும், அடுத்த 39 ரன்களை 18 பந்துகளிலும் இலங்கை அணி எடுத்தது.

பின்னர் ஆடவந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பிரபலமான மட்டையாளர்கள் இந்த ஆட்டத்திலும் சரியாக விளையாடவில்லை.

யுனிவர்சல் பாஸ் கெயில் (1 ரன்), இவின் லூயிச் (8 ரன்), ரோஸ்டன் சேஸ் (9 ரன்), ரசல் (2 ரன்), அணித் தலைவர் பொலார்ட் (0 ரன்), ஹோல்டர் (8 ரன்), பிராவோ (2 ரன்) என அனைவரும் சொதப்பினார்கள். ஹெட்மயர் மட்டும் 54 பந்துகளில் 8 ஃபோர், நாலு சிக்சர்களுடன் 81 ரன் எடுத்து அவுட்டாகமல் இருந்தார்.

இறுதியில் இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தோற்றுப்பொனது.
இன்றைய ஆட்டங்களோடு இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம் மூன்று அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.