மாலத்தீவை நோக்கி… சீன உளவுக் கப்பல்! தீவிர கண்காணிப்பில் இந்திய அரசு!

Published:

chinese ship - 2026
#image_title

 சீனக் கடற்படையின் உளவுக் கப்பலான ஜியாங் யாங் ஹாங் – 3 மாலத்தீவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பலின் மாலத்தீவு வருகை, இந்திய அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளதால், இந்த நடமாட்டம் குறித்து அரசு தீவிர கண்காணிப்பில் உள்ளது.

பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளை சீனா நிதி அளித்து வளைத்துப் போட்டுள்ளது. இந்த நாடுகளுக்கு பல்வேறு வகையிலும் நிதி உதவி அளிப்பதாக ஆசை வலையில் வீழ்த்தியுள்ள சீன அரசு, இந்தியாவை உளவு பார்க்க உதவும்படி அந்நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இலங்கையின் ஹம்பன்தோட்டா, பாகிஸ்தானின் கராச்சி துறைமுகங்களில் தன் கடற்படைக்குச் சொந்தமான உளவுக் கப்பல்களை நிறுத்தி, சீனா ஏற்கெனவே இந்தியப் பெருங்கடலில் நம் நாட்டின் முக்கிய கேந்திரங்கள், எண்ணெய்க் குழாய்கள் உள்ளிட்டவற்றை உளவு பார்த்த சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில்தான், சீன அடிவருடியான முகமது முய்சு இந்தியப் பெருங்கடல் தீவான மாலத்தீவின் அதிபராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதில் இருந்தே இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார். மாலத்தீவில் உள்ள இந்தியப் படைகளை மார்ச் 15க்குள் திரும்பப் பெற கெடு விதித்தார். அண்மையில் சீனா சென்ற அவர், அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது தங்கள் நாட்டுக்கு சீனர்கள் அதிக அளவில் சுற்றுலா வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

முன்னதாக, பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறாகக் கருத்து தெரிவித்த விவகாரத்தில் இந்தியா – மாலத்தீவு இடையே உரசல் ஏற்பட்டது. இந்நேரத்தில் சீனக் கடற்படைக்குச் சொந்தமான ஜியாங் யாங் ஹாங் 03 என்ற உளவுக் கப்பல், மாலத்தீவு தலைநகர் மாலேவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கப்பல் இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளைக் கடந்து, சுந்தா ஜலசந்தி அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியை அடைந்துள்ளதாகவும் அடுத்த மாதம், அதாவது பிப்ரவரி 8ஆம் தேதி மாலே வந்தடையும் என்றும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

இது, ஆராய்ச்சிக் கப்பல் என்ற பெயருடன் மாலத்தீவு வந்து கொண்டிருக்கிறது. இந்தக் கப்பல், 4,300 டன் எடை கொண்டது. இந்தக் கப்பல் இந்தியப் பெருங்கடலின் தரைப்பகுதியை ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்கால இயற்கைப் பேரிடருக்கான சாத்தியக்கூறுகள், அப்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்கான வசதிகள் குறித்த தகவல்களை சீனா சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது உளவுக்கப்பல் என்று இந்திய அரசு கூறி வருகிறது. இந்தியாவின் கடற்கரைக் கட்டமைப்புகளை மோப்பம் பிடிக்கவும், கடலுக்கடியில் உள்ள இந்திய அரசின் முக்கிய வலைப்பின்னல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களின் நிலை நிறுத்துதல், நடமாட்டம், இயங்கு தன்மை இவை போன்றவற்றை சீனா மோப்பம் பிடிக்க வருவதாக குற்றம் சாட்டி வருகிறது.

Related articles

Recent articles

spot_img