‘தேர்தல் சீர்திருத்தவாதி’ டி.என்.சேஷன் காலமானார்!

சற்றுமுன் தமிழகம்
tn seshan - 2026

இந்திய நாட்டின் தேர்தல் சீர்திருத்தவாதி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தன் 87 ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவரது முழு பெயர் திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் என்பது.

கேரள மாநிலம், பாலக்காடு திருநெல்லையில் டிச.15, 1932ல் பிறந்தார். பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்ற அவர் பின்னர் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். தொடர்ந்து ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார்.

பின்னர்,1955ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்து பல்வேறு பதவிகளை வகித்தார். இவர், நாட்டின் பத்தாவது தலைமை தேர்தல் ஆணையராக 1990 முதல்1996 வரை பதவி வகித்தார். அப்போது அவர் செய்த சீர்திருத்தங்கள் இன்றளவும் பேசப் படுகின்றன.

தலைமை தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1997ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் கே.ஆர்.நாராயணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

1999ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பாஜக., மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

பின்னர் சென்னை அடையாறில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயலக்ஷ்மி சேஷன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவுடன் சென்னை வீட்டில் வசித்து வந்த அவர், நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

அமெரிக்காவின் ஹர்வார்டு பல்கலையில் பொது நிர்வாகத்தில் மாஸ்டர் பட்டம் பெற்ற அவர், தன் சிறப்பான பணிகளுக்காக 1996ல் ராமன் மகாசேசே விருது பெற்றுள்ளார்.

ஓர் அரசு அதிகாரி எப்படி வாழ வேண்டும், எப்படி நிர்வகிக்க வேண்டும், எப்படி அப்பழுக்கற்றவனாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் (டி.என்.சேஷன்). சேஷன் போன்ற மேன்மக்கள் இன்று அரசுப் பணிகளில் அரிதிலும் அரிதாகி வருவது தேசத்தின் சாபக்கேடு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!

டி.என்.சேஷனின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில்…. தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தங்களை எதிர்நோக்கிய சேஷனின் முயற்சி ஜனநாயகத்தை வலுவுள்ளதாக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.