
“ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்”-பெரியவா
(அன்னாபிஷேகம் இன்று-11-11-2019).
சொன்னவர்; பழக்கடை பி.ஆர்.தியாகராஜன். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
கங்கை கொண்ட சோழபுரம் அன்னாபிஷேகத்துக்கு என்று ஒரு கமிட்டி அமைத்தார்கள்,பெரியவா. அப்போதைய ரயில்வேத்துறை அமைச்சர், கமிட்டியின் தலைவர். நான் செயலாளர்-என்று, காஞ்சியில் பெரியவா அறிவித்தார்கள்.
ஆறு ஆண்டுகள்,மிகவும் பிரமாதமாக அன்னாபிஷேக தெய்வப் பணியை நான் நடத்துவதற்கு பெரியவாளின்கருணை துணை நின்றது.
ஸ்ரீ பி.என். ராகவேந்திர ராவ் என்பவர், ஓர் ஆண்டு, ஆந்திரா முதல் தரமான அரிசி நூற்றெட்டு மூட்டைஅனுப்பிவிட்டார்.
“அபிஷேகம்,அன்னதானத்துக்கு அதை வைத்துக் கொள்ளலாமா?” என்று மகா சுவாமிகளிடம் கேட்டோம்.
“ஒரு பிடி அரிசியானாலும், பல பேர்களிடம் அரிசி வாங்கி அன்னாபிஷேகம் செய்யணும்னு நினைச்சேன். போகட்டும். அவர் வேண்டுகோளின்படி இந்த வருஷம் அவர் அனுப்பியுள்ள அரிசியை உபயோகப் படுத்திக்கோ”என்றார்கள்.
நிகழ்ச்சியெல்லாம் முடிந்தவுடன் பார்த்தால், முப்பத்திரண்டு மூட்டை அரிசி மிகுந்திருந்தது.
“உன் இஷ்டம் போல், கோவில்களுக்குக் கொடுத்து விடு” என்று சொல்லிவிட்டார் ,ராவ். காஞ்சிபுரம் சென்றுமகா சுவாமிகளிடம் தெரிவித்தேன்.
“அவர் எதற்காக உன்னிடம் கொடுத்தார்? அதைச் செய்தது போக, மீதி உள்ளதை விற்று, பாங்க் டிராப்ட் எடுத்து அவருக்கு அனுப்புவதுதான் முறை.”
இருபத்திரண்டாயிரத்து நானூறு ரூபாய்க்கு டிராப்ட் எடுத்தேன். ஒரு சால்வை, ஸ்ரீ மடத்துப் பிரசாதம்,டிராப்ட் முதலியவைகளுடன் ஸ்ரீமடம் சிஷ்யர் ஒருவரை ஸ்ரீ ராவ் அவர்களிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பி வைத்த மகான் மகாசுவாமிகள்



