ஜெயலலிதா 3ஆம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி!

சற்றுமுன் சென்னை தமிழகம்
edappadi jayalalitha anjali - 2026

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

அதிமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரை நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியில் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்.

இந்தப் பேரணியில், அதிமுக.,வின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். பேரணியின் முடிவில் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அதிமுக கிளை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் ஜெயலலிதாவின் திருவுருவப் படங்கள் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுகிறது. பேரணி மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.