கேரளா: 3 பேர் கொவைட்-19 பாதிப்பு நீங்கி வீடு திரும்பினர்!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
korona - 2026

கேரள மாநிலத்தில் கொவைட்-19 (கரோனா வைரஸ்) நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த மூன்றாவது நபரும் வீடு திரும்பியதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் 3 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த மூவரும் சீனாவில் இருந்து கேரளத்துக்குத் திரும்பியவர்கள். அவர்கள் மூவரும் தனிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு திருச்சூர், ஆழப்புழா மற்றும் காசர்கோட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இதில், ஆழப்புழாவில் சிகிச்சை பெற்று வந்த நபர் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்ததையடுத்து, கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பினார்.

இதைத் தொடர்ந்து காசர்கோட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினார்.

அவர்களது ரத்த மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் மருத்துவமனைகளிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

அவர்கள் அடுத்த 10 நாட்களுக்கு வீட்டிலேயே தனிப்பட்டு இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது கடைசி பரிசோதனையின் முடிவுகள் மூலம் மருத்துவக் கல்லூரி உறுதிசெய்தது.

இதையடுத்து மருத்துவக் குழு வியாழக்கிழமை நடத்திய ஆலோசனைக்குப் பின் அந்த மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.