திருவனந்தபுரம்: இளையராஜா என்றால் இசைஞானியின் பெயர்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், கேரளத்தில் அக்கால ராஜாக்கள் ஆண்ட நேரத்தில் இளையராஜா என்ற பெயரும் பிரபலமாகத்தான் இருந்தது. இருப்பினும், இன்று இளையராஜாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அவர் பெயரை டைட்டிலாகக் கொண்டு ஒரு படம் தயாராகிறது. இது மலையாளத்தில்!
இசைஞானி இளையராஜா இப்போது நாட்டின் உயரிய பத்மபூஷண் விருதும் பெற்று பெருமை பெற்றிருக்கிறார். ஆனாலும் அவரை மேஸ்ட்ரொ என்று அழைப்பதில்தான் இசை ரசிகர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி! அவருக்கு எத்தனையோ பெருமைகள் உள்ளன. ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்தவர் ஆயிற்றே!
தற்போது மலையாள சினிமா உலகமும் இசைஞானியின் பெயரைப் படத்திற்குச் சூட்டி பெருமை சேர்க்கவுள்ளது. ‘இளையராஜா’ எனும் டைட்டிலில் புதிய படம் ஒன்றை இயக்கப் போக்கிறார் மலையாள சினிமா உலகின் பிரபல இயக்குநர் மாதவ் ராமதாஸன்.
அவர், ‘இளையராஜா’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு ஒன்றை டைட்டில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். இந்தப் படம், சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகிறது. இந்தப்படத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிப்பார் எனப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் தொடங்குமாம்.
மாதவ் ராமதாஸன், மலையாளத்தில் சுரேஷ்கோபி, பார்த்திபன் இருவரையும் வைத்து ‘மேல்விலாசம்’ என்கிற படத்தை எடுத்து சாதனை படைத்தவர். ஒரு கோர்ட் ஹாலில் மொத்தப் படமும் ஒரு விசாரணை வடிவில் நகர்வதாக ‘மேல்விலாசம்’ அமைந்திருந்தது. அடுத்து சுரேஷ்கோபி, ஜெயசூர்யா இருவரையும் வைத்து மருத்துவமனை முறைகேடுகளை மையப்படுத்தி ‘அப்போதேகேறி’ படத்தை இயக்கி புகழ்பெற்றவர்.