மாணவர்களுக்கு ‘குட்’ நியூஸ்! ஆசிரியர்களுக்கு ‘பேட்’ நியூஸ்!

கல்வி சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
edappadi video conference1

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வை தொடங்க அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன் வருகிற 11-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்தக்கூடாது என அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில் தெலங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் இன்றும் ஆலோசனை நடத்தப் பட்டது. இச்சந்திப்பின்போது பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்குதலை அடுத்துஸ தமிழகத்தில் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி. நிலுலையில் உள்ள 11-ம் வகுப்பு தேர்வும் ரத்து. எஞ்சியுள்ள 12-ம் வகுப்பு தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் 80 சதவீதம் மற்றும் வருகைப்பதிவுக்கு 20 சதவீதம் மதிப்பெண்கள் வழங்கப்படும். கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் மாணவர்கள் நலன் கருதி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்த அறிவிப்பால், பத்தாம் வகுப்பு மாணவர்களும், 11ம் வகுப்பு விடுபட்ட தேர்வை எழுதாத நிலையில் அந்த மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரம், நேற்று அவசர அவசரமாக தங்கள் பள்ளிகளுக்குத் திரும்பிய ஆசிரியர்கள் நொந்து போய் புலம்புகின்றனர். வெகுநாட்கள் வேறுவழியின்றி பணி புரியும் ஊர்களில் இருந்து இபாஸ் பெற்றுக் கொண்டு, தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியிருந்த ஆசிரியர்கள், ஜூன் 8ம் தேதிக்கு அவரவர் பணிபுரியும் பள்ளிகளில் ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிடப் பட்டதால், அடித்துப் பிடித்து நேற்று பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில், மறு நாளே தேர்வுகள் ரத்து என்று வெளியான அறிவிப்பு, அந்த ஆசிரியர்களுக்கு கடும் விரக்தியைத் தந்துள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.