இணைப்பில் நீட்டிக்கும் இழுபறி: சசிகலாவை நீக்க எடப்பாடி தயக்கம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

edappadi dinakaran panneerselvam - 2026

சென்னை:

சசிகலாவை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட பிறகே, அணிகள் இணைப்பு குறித்த இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை விதித்துள்ளதால் இழுபறி நீடிக்கிறது.

அதிமுக.,வின் இரு அணிகளும் இன்று இணைவதற்கான இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டதால், இன்று காலை முதலே பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக., கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிக அளவில் குவிந்து வருகிறார்கள். அங்கே திரண்டுள்ள தொண்டர்கள் உற்சாகத்துடன் இருந்தனர்.

மேலும், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கும் அ.தி. மு.க. தலைவர்கள் செல்வதாக ஏற்பாடு செய்யப் பட்டதால், அங்கும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டது. ஜெயலலிதா சமாதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. ஜெயலலிதா சமாதியில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்துவந்து, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் ஜெயலலிதா நினைவிடத்திலும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவதாக அறிவிப்பு கொடுத்தால் மட்டுமே, தாங்கள் தலைமைக் கழகத்துக்கு வரப் போவதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டதாம். எனவே அணிகள் இணைப்புக்கு திடீர் முட்டுக் கட்டை ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலோ, பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனராம். இந்தத் தகவல் பரவியதை அடுத்து, தலைமைக் கழக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இருப்பினும் அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சசிகலாவை கட்சியை விட்டு நீக்கினால், தினகரன் தரப்பு என்ன முடிவு எடுக்கும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தினகரன் தரப்புக்கு 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ளதால், ஆட்சி கலையும் வாய்ப்பும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.