ஐந்தருவி வெள்ளத்தில்… அடித்து வரப்பட்ட காட்டுப் பன்றி!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
courtallam five falls pig - 2026

குற்றால மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . இதில், ஐந்தருவியில் வந்த வெள்ளத்தில் காட்டுப்பன்றி ஒன்று, அருவியில் மேலிருந்து இழுத்து வரப் பட்டு, கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் கிடந்தது. அதனை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர்.

குற்றால மலைப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று இரவு பெய்த பலத்த மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் ஐந்தருவியில் காட்டுப்பன்றி ஒன்று, வெள்ளத்தில் இழுத்து வரப் பட்டுள்ளது. வெள்ள நீர் அதிகமாக இருந்ததால் காட்டுப்பன்றியால் கரையேற முடியாமல் வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட நிலையில் அருவியில் மேலிருந்து கீழே விழுந்துள்ளது. இதனால் முகத்தில் தாடைப் பகுதியில் பெரும் சிதைவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அருவிக்கரை பகுதியிலேயே உயிரிழந்தது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஏற்கெனவே சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அருவிப் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப் படவில்லை. இதனால் இன்று காலை அருவிக்கு பாதுகாப்புக்குச் சென்ற போலீசார் அருவிக்கரையில் காட்டுப்பன்றி இறந்து கிடப்பதை அறிந்து உடனடியாக குற்றாலம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலர் பாலகிருஷ்ணன், குற்றாலம் பாரஸ்ட் வனவர் அழகர்ராஜ், வனக்காப்பாளர் சசிகுமார் மற்றும் வனவர் அருள்ராஜ், வனக்காவலர் வனராஜ், வேட்டை தடுப்பு காவலர் செண்பகம் ஆகியோர் ஐந்தருவி பகுதிக்கு விரைந்து வந்து அருவிப் பகுதியில் உயிரிழந்த நிலையில் கிடந்த காட்டுப் பன்றியை எடுத்துச் சென்றனர்.

கால்நடை மருத்துவர் சசிகுமார் உடற்கூறு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அந்த காட்டுப் பன்றியை வனப் பகுதிக்குள் கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

உயிரிழந்த காட்டுப்பன்றிக்கு சுமார் எட்டு வயது இருக்கலாம் என்றும் 100 கிலோ எடை உள்ளது என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.