லஞ்சம் கேட்டு மாணவரை அறைந்த காவல் அதிகாரி: மாணவர்கள் போராட்டம்

சற்றுமுன் தமிழகம் மதுரை
IMG 20170919 WA0020 - 2026

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர் நிரஞ்சன். இவர், கடந்த 16-ம் தேதி தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, தேனி ஆனந்தம் சில்க்ஸ் அருகில் வண்டியை நிறுத்திய எஸ்.ஐ அமுதன் மற்றும் இரண்டு காவலர்கள், நிரஞ்சனிடம் லைசன்ஸைக் கேட்டுள்ளனர்.

அதை அவர் எடுத்துக்காட்டிய பின்னர், ‘ஹெல்மெட்டை தலையில் போடாமல் ஏன் கையில் வைத்திருந்தீர்கள்? ஃபைன் கட்டிவிட்டுச் செல்லுங்கள்!’ என்று எஸ்.ஐ அமுதன் கூறியுள்ளார்.

‘அவசரமாக சென்றதால் ஹெல்மட் போட மறந்துவிட்டேன். நான் மருத்துவக் கல்லூரி மாணவன். மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும்.’ என்று கூறியுள்ளார் நிரஞ்சன்.

‘நீ எல்லாம் டாக்டர் ஆகி என்ன கிழிக்கப் போற? பையில் எவ்வளவு வச்சுருக்க?’ என்று கூறிக்கொண்டே நிரஞ்சனிடம் இருந்த 100 ரூபாயைப் பிடுங்கியுள்ளார் அமுதன்.

100 ரூபாய்க்கு ரசீது போட்டுக்கொடுங்கள் என நிரஞ்சன் கேட்க, ‘ரூல்ஸ் பேசுறீயா
நீ’ என்றவாறு நிரஞ்சனை கன்னத்தில் அறைந்துள்ளார் அமுதன்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட காவல்துறையினர், சமீப காலமாகவே கண்டதும்அடிக்கும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை பத்திரிகையாளர், காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்டார். தற்போது மருத்துவ மாணவர்.

எஸ்.ஐ-க்கு சாலை விதிமீறலில் அபராதம் விதிக்க அதிகாரம் இல்லாத சூழலில், அவர் எப்படி நிரஞ்சனின் இருசக்கர வாகனத்தை நிறுத்தலாம். அப்போது அங்கு பணியில் இருக்க வேண்டிய ஆய்வாளர் எங்கு சென்றார்? காவல்துறையினரிடம் அபராத ரசீது கேட்கக்கூடாதா என்ன? போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.

மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் நடவடிக்கை எடுப்பாரா அல்லது அமைதியாக இருந்து விடுவாரா?

செய்தி… கே.சி.சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.