இலங்கையில் தமிழிலும் தேசிய கீதம்: சிறிசேன அனுமதிக்கு சுதந்திர கட்சி போர்க்கொடி

உலகம்

கொழும்பு: srilanka-government இலங்கையில் சிங்கள மொழியில் உள்ளது போலவே நாட்டின் இரண்டாவது பெரும்பான்மை மக்களான தமிழர்களின் தாய்மொழியான தமிழிலும் அந்நாட்டின் தேசிய கீதத்தை பாடுவதற்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேன தலைமையிலான அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைக் கண்டித்து ஆளும் இலங்கை சுதந்திர கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. இலங்கையில் 1951-ம் ஆண்டில் இருந்து தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. இதற்கு கடந்த 2010-ம் ஆண்டு ராஜபட்ச அரசு தடை விதித்தது. தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பழைய நடைமுறைப் படி, தமிழிலும் தேசிய கீதத்தைப் பாட அதிபர் மைத்ரிபால சிறிசேன ஒப்புதல் அளித்தார். அதிபரின் இந்த முடிவுக்கு ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ராணுவ கமாண்டருமான சரத் வீரசேகரா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தபோது… ‘ நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேசிய கீதம் நாட்டின் தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. மைத்ரிபாலாவின் இந்த முடிவு வெறும் 20 லட்சம் (தமிழ்) மக்கள் தொகையை திருப்திப்படுத்தும் செயலாகும். இந்தியாவில் ஆறரை கோடி தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆனால், அங்கு தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை’ என்றார். ஆனால், இலங்கை சுதந்திர கட்சியின் தற்போதைய செய்தி தொடர்பாளர் டிலன் பெரேரா. ‘இந்தக் கருத்து சரத் வீரசேகராவின் தனிப்பட்ட கருத்து. கட்சியின் ஒட்டுமொத்த கருத்தல்ல. தமிழிலும் தேசிய கீதம் பாடப்படலாம் என்ற அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இதைப்போன்ற இனவெறி மனப் போக்கினால்தான் ராஜபட்ச தோல்வியை தழுவினார்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.