காவிரி நதிநீர் ஒழுங்குமுறை ஆணையம் உடனே அமைக்கக் கோரி பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

Published:

panneerselvam சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணைகளை சட்டவிரோதமாகக் கட்டக்கூடாது என்று கர்நாடகத்திற்கு பிரதமர் ஆலோசனை கூற வேண்டும்; உடனே காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க நீர்ப் பாசனத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.. தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்… காவிரி நடுவர் நீதிமன்றம் இறுதியாகப் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக கர்நாடக அரசு தொடர்ந்து செயல்படுவதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கான இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கர்நாடக அரசு மேகதாது அருகே புதிய அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கியிருப்பதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் நீர்மின்திட்டம் உட்பட எந்த திட்டத்தையும் காவிரி படுகையில் மேற்கொள்ளக் கூடாது என்று கடந்த 2.9.2013 அன்று ஜெயலலிதா மத்திய அரசுக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். எந்த ஒரு திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது என்றும் ஜெயலலிதா அந்த கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். அத்துடன் இதனை கண்காணிக்க காவிரி நிர்வாக வாரியம் என்ற நிரந்தர அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டிருந்தார்.கடந்த 12.11.2014 முதல் நானும் தங்களுக்கு இதுகுறித்து ஒரு கடிதத் எழுதியிருந்தேன். மேகதாது அருகே இரண்டு அணைகளை கட்டுவதற்கு கர்நாடகா தொழில்நுட்ப ஆய்வு தொடர்பாக உலக அளவில் ஒப்பந்தத்தை கர்நாடகா அரசு கோரியிருந்தது. இது காவிரி நதிநீர் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருந்தேன். குடிநீர் திட்டம் என்ற பெயரில் எந்த ஒரு புதிய திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 18.11.2014ல் ஒரு வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5.12.2014 அன்று தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதை மத்திய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. கர்நாடக அரசு, தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக புதிய அணைகளை கட்டவிருப்பது காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு முரணானது. எனவே, மேகதாதுவில் கர்நாடகா புதிய அணைகளை சட்ட விரோதமாக கட்டக்கூடாது என்று தாங்கள் தலையிட்டு கர்நாடகா அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் நிறைவேற்றக்கூடாது என்றும் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்ற எங்கள் கட்சியின் தலைவர் ஜெயலலிதா மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டும் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. எனவே, உடனடியாக காவிரி நிர்வாக வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை எந்த தாமதமும் இன்றி அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காவிரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு அப்பொழுதுதான் முழுமையாக செயல்படுத்த முடியும் – என்று கூறியுள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img