சோனியா மருமகனுக்கு விதிகளை மீறிய சலுகை: முந்தைய ஹரியானா அரசு தாராளம்

இந்தியா

Robert_Vadraசண்டிகர்: சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு விதிகளை மீறி சலுகை காட்டியதாக முந்தைய ஹரியானா அரசுக்கு கணக்குத் தணிக்கை அமைப்பு சிஏஜி அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் போது அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவுக்கு முறைகேடான வகையில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஹரியானா அரசுக்கு சிஏஜி கண்டனம் தெரிவித்துள்ளது. 2013-14-ஆம் ஆண்டுக்கான கணக்குத் தணிக்கை அறிக்கை, ஹரியானா மாநில சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஸ்கைலைன் ஹாஸ்பிடாலிட்டி உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு முறைகேடான வழிகளில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்கைலைன் நிறுவனம் வதேராவுக்குச் சொந்தமானது. அரசு நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்போது, நிலத்தின் மதிப்பில் 15 சதவீதத்துக்கும் மேல் கிடைக்கும் நிகர லாபத்தை அரசுக் கருவூலத்திலேயே ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறையை ஹரியாணா அரசு கொண்டு வரவில்லை. இந்த விதியை மீறி, நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, மிக அதிக லாபத்தில் விற்று ஒப்பந்ததாரர்கள் பயனடைந்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குப் பெரிய விலைக்கு விற்று ஆதாயம் அடைந்துள்ளனர். குர்கான் மாவட்டத்தில் மிக முக்கியமான இடத்தில் இருந்த 3.5 ஏக்கர் நிலத்தை ஸ்கைலைன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம், டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு ரூ.58 கோடிக்கு விற்பனை செய்தது. ஆனால், வெறும் ரூ.7.5 கோடிக்கு ஹரியானா அரசிடம் அந்த நிலத்தை வாங்கி, அதனை ரூ.58 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் ஸ்கைலைன் நிறுவனத்துக்கு ரூ.50.5 கோடி லாபம் கிடைத்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இதுபோல விற்பனை செய்து மொத்தமாக ரூ. 267.47 கோடி வரை ஆதாயம் ஈட்டியுள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகத்துக்குச் செலுத்த வேண்டிய வரியை உரிய முறையில் செலுத்தாமல் விட்டுள்ளனர்… என்று சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் வதேராவின் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை டி.எல்.எஃப் நிறுவனத்துக்கு விற்பனை செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று முந்தைய காங்கிரஸ் அரசு கூறியிருந்தது. இந்நிலையில், சிஏஜி அறிக்கையில் வதேராவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் மீது மோசடி புகார் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.