
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா பகுதியை சார்ந்தவர் சுப்ரீத் (வயது 32). இவர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரிசிகெரெ செஸ்காம் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சுப்ரீத் இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காதல் ஜோடி அங்குள்ள துலே மல்லேஸ்வரா மலைக்கு சென்றுள்ளது.
அங்கு தனிமையில் மறைவான பகுதியில் காதல் ஜோடிகள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். காதல் ஜோடியின் தனிமையை அங்கு தங்கியிருந்த 4 சிறுவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.
இதன்பின்னர், சுப்ரீத்தை தொடர்பு கொண்டு நீங்கள் தனிமையில் இருக்கும் வீடியோ உள்ளது, அதனை வெளியிடாமல் இருக்க பணம் வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.
இதனால் பயந்துபோன சுப்ரீத் சிறுவர்கள் கேட்கும் சமயமெல்லாம் பணத்தை கொடுத்து வந்துள்ளனர். சிறுவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில், பெண்ணை அடைய திட்டமிட்டு அவரின் செல்போன் எண்ணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சுப்ரீத் தற்கொலை செய்ய முடிவெடுத்து, பெங்களூரில் உள்ள மெஜஸ்டிக் பகுதியில் தனியார் விடுதியில் தங்க அறையெடுத்து தங்கியுள்ளார்.
அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உப்பார்பேட்டை காவல் துறையினர், சுப்ரீத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் எழுதி வைத்த கடிதத்தில் மேற்கொண்ட விஷயம் தெரியவரவே, சுப்ரீத்தின் தற்கொலைக்கு காரணமான 4 சிறுவர்களையும் காவல் துறையினர் கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.