இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஐந்தாம் நாள்: இந்தியா பெற்ற மகத்தான வெற்றி
பும்ரா, ஷமி ஆகியோரின் அபார ஆட்டம்
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
லாட்ஸ் மைதானத்தில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து என்ன திட்டத்துடன் விளையாடினார்கள் என்பதே புரியவில்லை. ஐந்தாம் நாள் தொடக்கத்தில் ரிஷப் பந்த் அவுட்டாகிப் போகிறார்; ஷமியும் பும்ராவும் விளையாட வருகிறார்கள்; அவர்கள் இருவருக்கும் சரியான லைன் அண்ட் லெங்க்த்தில் பந்து வீசாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் எகிறி விழும் பந்துகளாக வீசுகிறார்கள். இங்கிலாந்து அணித் தலைவர் நாலு சிலிப் ஒரு கலி என ஃபீல்டர்களை நிறுத்தாமல், பவுண்டரியில் நான்கு ஃபீல்டர்களை வைக்கிறார்.
இந்தத் தவறுகள் ஒருபுறம் இருந்தாலும் பும்ரா, ஷமி இருவரும் மிகப் பிரமாதமாக ஆடி இந்தியாவின் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஸ்கோரை 298 என்ற அளவிற்கு உயர்த்தினர். அதன் பின்னர் நமது பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து அணியை 120 ரன்களுக்கு அவுட்டாக்கினர்.
இந்திய அணியின் தலைவர் கோலியின் கேப்டன்சியும் அவ்வளவு சரியாக இல்லை என்றாலும் வெற்றி பெற்றுவிட்டார். அதிக வெற்றிபெற்ற அணித்தலைவர்கள் பட்டியலில் நான்காமிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய வெற்றிக்கான காரணங்கள் என்னென்ன எனப் பட்டியலிட்டால் – (1) முதல் இன்னிங்க்ஸில் ராகுலின் ஆட்டம், (2) ரோகித் சர்மாவின் ஆட்டம், (3) கோலியின் ரொம்ப சுமாரான ஆட்டம் (4) புஜாரா, ரஹானே இருவரின் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம் (5) பும்ரா, ஷமி ஆகியோரின் ஆட்டம் (6) சிராஜ், பும்ரா, இஷாந்த், ஷமி ஆகியோரின் பந்துவீச்சு இவற்றைச் சொல்ல வேண்டும்.
மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 25இல் லீட்ஸ் மைதானத்தில் தொடங்கும். வெற்றி பெற்ற அணியே தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை. அஸ்வின் விளையாடுவது டவுட்தான்.