ஆக்ஸிமீட்டரின் விலையும், விற்பனையும் அதிகரிப்பு!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம்
pulse oximeter
pulse oximeter

வீட்டில் தனிமையில் இருந்து, கொரோனா சிகிச்சை மேற்கொள்வோர் எண்ணிக்கை, அதிகரித்து வருவதால், உடலில் ஆக்சிஜன் அளவை அறிய உதவும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் விற்பனையும், கோவையில் அதிகரித்துள்ளது.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

தற்போது கொரோனா இரண்டாம் அலையில் பலருக்கு, ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படுவதால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளும், கொரோனா அறிகுறிகளுடன், பரிசோதனை முடிவுக்காக காத்திருப்போரும், அடிக்கடி ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டுமென, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதனால், மருத்துவமனைகளில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஆக்ஸி மீட்டர்கள், தற்போது வீட்டு முதலுதவி பெட்டியின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. கொரோனா லேசான பாதிப்புள்ள ஆயிரக்கணக்கான பேர், வீட்டில் தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, அபரிமிதமாக குறைந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.இல்லையெனில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனால், தொற்று ஏற்பட்டு வீட்டில் சிகிச்சை பெறும் அனைவரும், இக்கருவியை வாங்கி வைத்தாக வேண்டிய நிலை உள்ளது. இதனால், இதுவரை ஆக்ஸி மீட்டர் பற்றி அறிந்திராத பலரும், தற்போது அதனை வாங்க ஆர்வம் காட்டி வருவதால், அதன் விற்பனை, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு முன் இருந்ததை விட, கோவை மாவட்டத்தில் தற்போது, 25 முதல் 30 சதவீதம் வரை, விற்பனை அதிகரித்துள்ளது.

தட்டுப்பாடு உள்ளதால், ஆக்ஸி மீட்டர்களின் விலையும், 35 முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, மருந்தக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.’

தட்டுப்பாடு கிடையாது’கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்க தலைவர் கருப்பையா கூறுகையில், ”மாவட்டத்தில் கொரோனா பரவலுக்கு முன், ஆக்ஸி மீட்டர் விற்பனை குறைவாக இருந்தது. விலையும்குறைவாக இருந்தது.

தற்போது மக்கள் பலர் பயன்படுத்த துவங்கி விட்டனர். விற்பனை அதிகரித்துள்ளதால் விலையை, 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர்.

கோவைக்கு பெரும்பாலும் வெளிநாட்டு ஆக்ஸி மீட்டர்கள் தான் வருகின்றன. தற்போது தேவை அதிகரித்துள்ளதால், 200 முதல் 300 ரூபாய் வரை அதிகரித்து விற்கப்படுகிறது.

கோவையில் ஆக்ஸி மீட்டர்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை. அனைத்து மருந்து கடைகளிலும் இருப்பு உள்ளது,” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.