புது தில்லி: தில்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
பல்வேறு விவகாரங்களில், தமிழகத்தில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடியாரின் தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. தினகரன் – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கம், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் படாதது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்று வெளியான செய்தியால் எழுந்த தாக்கம் என பல்வேறு விவகாரங்கள் தற்போது தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளன.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி சென்றுள்ளார். அவருடன், அமைச்சர் ஜெயக்குமாரும், அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்ய மனு அளிப்பார் என்று கூறப் படுகிறது.
நேற்று இரவு தில்லி சென்றடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக., எம்.பி.க்கள் சிலர் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் அனைத்து எம்.பிக்களையும் முதலமைச்சர் சந்தித்து பேசுகிறார்.




