நெல்லை காந்திமதி பள்ளி ஆதரவற்றோர் இல்லத்தை மூட கோயில் நிர்வாகம் சதி? இந்து முன்னணி கண்டனம்!

சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
hindu-munnani
hindu-munnani

நெல்லையப்பர் திருக்கோவில் நிர்வாகத்திலுள்ள காந்திமதி பள்ளி மற்றும் ஆதரவற்ற மாணவர் இல்லத்தை மூட கோவில் நிர்வாகம் சதி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்து முன்னணி அமைப்பு, கோயில் நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனை எதிரில் நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்து சமய அறநிலையத்துறை நடத்தி வரும் காந்திமதி மேல்நிலைப்பள்ளி கடந்த பல ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. பல ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியறிவும் ஆன்மீக சிந்தனையும் ஒழுக்க நெறியும் கொடுத்து பலரது வாழ்வில் ஒளியேற்றி உள்ளது.

பல்வேறு பகுதியில் உள்ள ஏழ்மை நிலையில் உள்ள கிராமப்புற ஆதரவற்ற மாணவ மாணவியர்கள் இங்கு உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் தங்கி காந்திமதி பள்ளியில் படித்து வருகின்றனர்

ஆனால் தற்போது காந்திமதி மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் எந்த மாணவர் சேர்க்கையும் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நெல்லையப்பர் திருக்கோவில் செயல் அலுவலர் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ஆதரவற்றோர் இல்லத்திலும் மாணவ மாணவியர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாணவ மாணவியரை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் பலர் பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டபோது, புதிய மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

நெல்லையப்பர் திருக்கோவில் நிர்வாகம் மேற்படி காந்திமதி பள்ளியை நிர்வகிப்பதற்கு சோம்பல்பட்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்து, போதிய மாணவர்கள் எண்ணிக்கை இல்லை என்ற காரணம் கூறி பள்ளியையும் ஆதரவற்றோர் ஆசிரமத்தையும் மூடுவதற்கு முயன்று வருவதாக பெற்றோர்களும் பொதுமக்களும் மிகுந்த வேதனைப் படுகின்றனர்.

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல புதிய பள்ளிகளை உருவாக்குவோம் என மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் பத்திரிக்கை செய்திகளில் கூறிவரும் நிலையில், பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் பள்ளியை நிர்வகிக்க இயலாமல் மூடுவதற்கு அறநிலையத்துறை முயன்று வருவது மிகுந்த கண்டனத்துக்குரியதாகும்!

நெல்லையப்பர் திருக்கோவில் நிர்வாகம் தனது நிர்வாகத் திறமையின்மை காரணமாக காந்திமதி பள்ளியை மூட முயன்று வருகிறதா அல்லது பாளையங்கோட்டை பகுதியில் தனியார் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மறைமுகமாக செயல்பட்டு பள்ளியை மூட முயன்று வருகிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது!

இதுகுறித்து தமிழக முதல்வரும் அறநிலையத்துறை அமைச்சரும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளரும் உடனடியாக தலையிட்டு வழக்கம்போல் இந்த ஆண்டும் பள்ளியிலும், ஆதரவற்ற மாணவர் ஆசிரமத்திலும் மாணவர் சேர்க்கை நடைபெற உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தவறினால் பொதுமக்களையும் பெற்றோர்களை திரட்டி பள்ளி முன்பும் மிகப் பெரிய போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என்று இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் கா.குற்றாலநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.