எனக்கு ஜோசியம் பத்தி எதுவும் தெரியாது: ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்று கூறப்படுவற்கு ஓபிஎஸ் பதில்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட இடங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அப்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தால் ஆட்சிக்கு ஆபத்து என்று ஜோதிடர்கள் கூறுகிறார்களே இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எனக்கு ஜோசியம் பற்றி எதுவும் தெரியாது என்று பதிலளித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த பகுதியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 10 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னிதி முன்புறம் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் அமைந்திருந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் தெரிந்ததும் மாவட்ட ஆட்சியர், கோவில் தக்கார், இணை ஆணையர், மதுரை மாநகராட்சி ஆணையர், வருவாய்த் துறையினர் என அனைவரும் விரைந்து செயல்பட்டனர். 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 60க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களின் துணையுடன் தீயணைப்பு நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டதால் தீ ஒரு மணி அளவில் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டு அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது. சேத மதிப்பு வந்த பின்னர் 6 மாதத்திற்குள் பழைய நிலைக்கு இந்த இடம் கொண்டு வரப்படும். ஆகம விதி மற்றும் பாரம்பரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு விபத்து நடந்த சுமார் 7 ஆயிரம் சதுர மீட்டர் பகுதி பழைய நிலைக்கு கொண்டு வரப்படும்.

தீ விபத்துக்குக் காரணம் என்ன என்று விசாரணை நடக்கிறது. இனிமேல் இது போன்ற தீ விபத்துகள் கோயில்களில் ஏற்படாமல் இருக்க குழு அமைத்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் பாதுகாக்கப்படும்.

கோவில்களை தனிப்பட்ட குழுக்களிடமோ, அமைப்பிடமோ ஒப்படைப்பது சரியானதாக இருக்காது. ஆலயங்களை பாதுகாக்கின்ற முழு பொறுப்பும் அரசுக்கு தான் உள்ளது… என்றார் ஓபிஎஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.