நாளை நமதே; வெப்சைட் துவக்கினார் கமல்: அனைவரும் கூடி தேரை இழுக்க அழைப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னை:

அரசியல்வாதியாக அரிதாரம் பூசி வரும் நடிகர் கமலஹாசன், வரும் 21ஆம் தேதி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளார். அதற்கு முன்னதாக, நாளை நமதே என்ற பெயரில் புதிய இணையதளத்தை தொடங்கினார்.

அண்மைக் காலமாக அரசியல் பேசி வரும் கமல், ஊடக பேட்டியில் தாம் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகக் கூறினார். அதற்கான பணிகளில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், நடிகர் ரஜினியும் தன் பக்கத்தில் அரசியலுக்கு வருவது போல் ரசிகர்கள் மத்தியில் பேசினார். மேலும் ரஜினி விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும் கூறி அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் யார் முதலில் தொடங்குவது என்பதில் போட்டி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கமல் வரும் 21-ஆம் தேதி அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டிலிருந்து தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். படப்பிடிப்பு காரணங்களுக்காக அமெரிக்கா சென்றுள்ள கமல், விரைவில் நாளை நமதே என்ற நோக்கத்தை முன்வைத்து மக்களைச் சந்திப்பார் என்று தெரிகிறது.

இதனிடையே, கமல் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடங்குவதற்கான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த நிலையில் https://naalainamadhe.maiam.com/ என்ற இணையதளத்தை கமல் தொடங்கி வைத்தார்.

ஊர் கூடித் தேர் இழுத்தால் நாளை நமதே என்ற தலைப்பில், தன்னார்வலர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இதில் இணையலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார் கமல். இந்த இணையதளத்தில் பதிவு செய்ய விரும்புவர் தகவல்கள் கேட்கப் படுகின்றன. கூகுள் பார்ம் மூலம் தகவல் தொகுப்பை சேகரிக்கும் பணி இணையதளம் மூலம் நடக்கிறது.

தன்னார்வலர்கள், சிஎஸ்ஈஆர், என்ஜிஓ, அடுக்குமாடி குடியிருப்பு என 4 பிரிவுகளில் பதிவு செய்யலாம். கல்வி, கொழில் சுற்றுச்சூழல்,வேளாண் துறை, நீர் மேலாண்மை, உள்ளிட்ட துறைகளில் பதிவு செய்யலாம் என கமல் இதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.