Dhinasari Home page

கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி..

மதுரை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாமியார்புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. இவரது மகன் கிருஷ்ணகுமார் (18). பள்ளி மாணவரான இவர் பகுதி நேரமாக அங்குள்ள மைக்செட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள நாகணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று இரவு அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியில் கிருஷ்ணகுமார் ஈடுபட்டு வந்தார்.

அப்போது உயர் அழுத்த மின் கம்பியில் அவரது கை பட்டதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவரை ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுபவம் இல்லாத மாணவரை மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபடுத்திய உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.