
குருபெயர்ச்சியை முன்னிட்டு சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் நாளை மறுநாளிலிருந்து 31ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது .
சென்னை குரு தலம் என்று போற்றப் படுகிறது திருவலிதாயம் – பாடி! குருபகவான் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரைச் சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இந்தத் தலத்தில் உறையும் சிவபெருமானை வணங்கினால் பாவம் நீங்கி, அவருக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருளினார்.
அதன்படி திருவலிதாயம் வந்த குரு பகவான், இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி, சுவாமியை வணங்கி அருள் பெற்றார். அதனால், இந்த தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பதும், தலத்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.

இந்தத் தலத்தில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனை வணங்கினால் திருமணத்தடை, நோய்கள் போன்றவை நீங்கும் என்றும், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட, ஞானம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.சென்னை, பாரிமுனை, கோயம்பேடு, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி நிறைய உள்ளன.
சென்னை -பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 சிவத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து நாளை மறுநாள் அதிகாலை 3.48க்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை முன்னிட்டு இந்தக் கோவிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் தொடங்கி 31-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது

காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை, மாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஒருவருக்கு 400 ரூபாய் கட்டணம்.
வரும் 31ம் தேதி குரு பரிகார ஹோமம் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்!



