கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி: தோல் தொழிற்சாலை மேலாளருக்கு வலை

உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், தனியார் தோல் தொழிற்சாலை ஒன்றின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்த தொழிலாளி விஷ வாயு தாக்கி பலியானார். தொடர்புடைய தோல் தொழிற்சாலையின் மேலாளர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. அதன் வளாகத்துக்குள் பின் பகுதியில் கழிவு நீர் தேக்கத் தொட்டி உள்ளது. இது தரை மட்டத்தில் இருந்து ஒன்றரை அடி நீள அகலம் கொண்ட மேடாக உள்ளது. அதன் திறந்த வாய்ப் பகுதி வழியே சென்று சுத்தப் படுத்தும் பணி நடக்கும். இந்த கழிவு நீர்த் தொட்டிக்கு தொழிற்சாலையில் உள்ள கழிவுகளும், கழிப்பறை கழிவுகளும் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், இந்தக் கழிவு நீர் தேக்க தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால் 3 தினக்கூலி தொழிலாளர்கள் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக தொழிற்சாலை நிர்வாகத்தால் அழைக்கப்பட்டனர். சிப்காட், எமரால்டு நகர் அருந்ததி காலனி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜகன் என்கிற சண்முகம் (38) நேற்று பிற்பகலில் கழிவு நீர்த் தொட்டியின் துவாரம் வழியாக இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தொட்டிக்குள் மூழ்கி விட்டார். இதில் அவர் விஷ வாயு தாக்கி மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொட்டியின் துவாரம் சிறிதாக உள்ளதால் அவரால் உடனடியாக தப்பித்து வெளிவர முடியவில்லை. இதை அடுத்து சிப்காட் தீயணைப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சண்முகத்தின் உடலை மீட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவல் அறிந்த சண்முகம் குடும்பத்தினர், ஊர்ப் பொதுமக்கள் சண்முகத்தின் உடலைக் கொண்டு செல்ல விடாமல் ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு மறியல் செய்தனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து கலைத்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிற்சாலையின் மேலாளரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.