திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பஸ் (கேஏ 51 – 9852) வியாழக்கிழமை இரவு புறப்பட்டது. இதில் டிரைவர், கிளீனருடன் 16 பயணிகள் இருந்தனர். இந்த பஸ், இரவு 11 மணிக்கு பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்தது. இந்த பஸ்சுக்குள் இருந்த பயணிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து நடந்த இடத்தை பணகுடி போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் பார்வையிட்டு மீட்புப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

