t20wc - 2026

T20 WC: ஆஸ்திரேலியா அதிர்ச்சித் தோல்வி

விளையாட்டு Featured உலகம்
t20wc - 2026

உலகக் கோப்பை டி20 போட்டிகள் – ஏழாம் நாள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சூப்பர் 12 ஆட்டங்கள் தொடங்கின; முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதிர்ச்சித் தோல்வி

இன்று சூப்பர் 12 ஆட்டங்கள் தொடங்கின. குரூப் 1இல் முதல் ஆட்டம் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் ஆப்கானிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே பெர்த் நகரில் நடைபெற்றது. 

முதல் ஆட்டம், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து

நியூசிலாந்து அணி (200/3, தேவன் கான்வாய் 92*, ஃபின் ஆலன் 42, ஹேசல்வுட் 2/41) ஆஸ்திரேலிய அணியை (17.1 ஓவரில் 111 ரன்னுக்கு ஆல் அவுட், மேக்ஸ்வெல் 28, சௌதி 3/6, சான்ட்னர் 3/31, போல்ட் 2/24) 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீசத் தீர்மானித்தது. நியூசிலாந்தின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் அதிரடியாக ஆடினார். அவர் முதல் நான்கு ஓவரில் முறையே 14, 5, 16, 7 ரன்கள் அடித்து ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஆறாவது ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 65/1 என்ற ஸ்கோரில் இருந்தது. மற்றொரு தொடக்க வீரரான கான்வே 20 ஓவர்களும் விளையாடி ஆட்டமிழக்காமல் 58 பந்துகளை சந்தித்து 92 ரன் எடுத்தார். அவருடன் இணைந்து வில்லியம்சன் (23 ரன்), பிலிப்ஸ் (12 ரன்), நீஷம் (26 ரன்) நன்றாக விளையாடினர். எனவே 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 200 ரன் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து ஆட வந்த ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விக்கட்டுகளை இழந்தது. மேக்ஸ்வெல் மட்டும் 20 பந்துகள் ஆடினார். மற்றவர்கள் அனைவரும் வந்தார்கள், போனார்கள். எனவே 17.1 ஓவரில் 111 ரன்னுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்து, ஆட்டத்தில் தோல்வியுற்றது. இதற்கு முன்னர் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை வென்றது 2011இல்தான். ஏறத்தாழ 10 ஆண்டுகள் கழித்து இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

இரண்டாவது ஆட்டம், ஆப்கானிஸ்தான்-இங்கிலாந்து

ஆப்கானிஸ்தான் அணி (19.4 ஓவரில் 112, இப்ராஹிம் சத்ரன் 32, உஸ்மான் கனி 30, சாம் கரன் 5/10, பென் ஸ்டோக்ஸ் 2/19, மார்க் வுட் 2/23) இங்கிலாந்து அணியிடம் (18.1 ஓவரில் 113/5, லிவிங்க்ஸ்டோன் 29, பட்லர் 18, ஹேல்ஸ் 19, மாலன் 18) ஐந்து விக்கட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இது ஒரு குறைவான ஸ்கோர் ஆட்டம். ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து விக்கட்டுகளை இழந்து வந்ததால் அதனால் 5.69 என்ற ரன்ரேட்டில்தான் ரன் சேர்க்க முடிந்தது. இங்கிலாந்தின் சாம் கரன் 3.4 ஓவர் வீசி 10 ரன் கொடுத்து ஐந்து விக்கட்டுகள் எடுத்தார். அதனால் ஆப்கன் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கடுகளையும் இழந்து 112 ரன் சேர்த்தது.

அடுத்த விளையாட வந்த இங்கிலாந்து அணி, எளிதான இலக்கை அடைய மிகவும் சிரமப்பட்டது. இருப்பினும் 18.1 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 113 ரன் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

நாளை குரூப் 1 பிரிவில் அயர்லாந்து இலங்கை அணிகள் இந்திய நெரப்படி காலை 0830 மணிக்கு ஹோபர்ட் மைதானத்திலும், குரூப் 2 பிரிவில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மதியம் இந்திய நேரப்படி 1230 மணிக்கு மெல்பர்னிலும் விளையாட உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.