பாகிஸ்தான் அணி படுதோல்வி: 150 ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி

சற்றுமுன்

icc-wc-2015உலகக் கோப்பை போட்டிகளின் பி பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில், இன்று க்றிஸ்ட்சர்ச் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் அணியை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 150 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியில், துவக்கத்திலேயே அந்த அணியின் அதிரடி வீரர் கெயில் 5 ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார். அவர் 4 ரன்களே எடுத்தார். பின்னர் ஸ்மித்தும் 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். ப்ராவோ, சாமுவல்ஸ், ராம்தின், சிம்மன்ஸ் என நடுவரிசை உறுதியாக நின்று விளையாடினர். ப்ராவோ 49, சாமுவல்ஸ் 38, ராம்தின் 51, சிம்மன்ஸ் 50, சமி 30 என எடுத்து ஆட்டமிழந்தனர். ரஸல் 13 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் அதிரடி காட்டி 42 ரன் குவித்து அணியின் எண்ணிக்கை 310 ரன்னை எட்ட உதவினார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் 23 ரன் உதிரியாகத் தரப்பட்டது குறிப்பிடத் தக்கது. இதில் 14 பந்துகள் வைட்கள். பின்னர் பாகிஸ்தான் அணி 311 ரன்னை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடத் துவங்கியது. ஆனால், துவக்கமே பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. நஸிர், யூனுஸ் கான், ஹரிஸ் சொஹெய்ல் மூவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். அஹ்மத் ஷேஹாத் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். மிஸ்பா உல் ஹக் 7 ரன்னில் ஆட்டம் இழக்க, அந்த அணி ஒரு ரன்னில் 4 விக்கெட் இழந்தும், 25 ரன்னில் 5 விக்கெட் இழந்தும் தடுமாறியது. ஆனால் பின்னர் வந்ஹ்ட ஷோஹெப் மசூத் 50 ரன்னும், உமர் அக்மல் 59 ரன்னும் எடுத்து மோசமான ரன் தோல்வியில் இருந்து பாகிஸ்தான் அணியை மீட்டனர். பின்னர் வந்த ஷாகித் அப்ரிடி 26 பந்தில் 28 ரன் எடுத்தார். வஹாப் 3 ரன்னும், சொஹெல் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 160 ரன்கள் எடுத்து படுதோல்வியை சந்தித்தது. மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் டெய்லர், ரஸல் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.