புது தில்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில், அரசுத் தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் நடைபெற்று வருகிறது. நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் பவானி சிங் ஆஜராகி வருகிறார். இந்நிலையில், பெங்களூரு தனி நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் ஆஜரான பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் ஆஜராக முடியாது என்றும், அவர் குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்வதால் அவரை இந்த வழக்கு விசாரணையில் அரசு வழக்குரைஞராகத் தொடர அனுமதிக்கக்கூடாது என்றும் கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த 11–ந்தேதி தள்ளுபடி செய்தது. அதுபோல், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் வாதாட, வழக்குரைஞர் பவானி சிங் அரசுத் தரப்பு வழக்குரைஞராகத் தொடர அனுதிக்கக் கூடாது என்று ஒரு மனுவும், ஜெயலலிதா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்று ஒரு மனுவும் அன்பாகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன. இதனிடையே இந்த மேல் முறையீட்டு மனுக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அன்பழகன், இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கல் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்தார்.

