chennai metro - 2026

20 மணி நேரத்துக்குப் பின் சீரான சென்னை மெட்ரோ ரயில் சேவை! பயணிகள் ‘டென்ஷன்’

சென்னை அடடே... அப்படியா? சற்றுமுன் பொது தகவல்கள்
chennai metro - 2026

சென்னையில் 20 மணி நேரத்திற்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை சீரானது. சென்னை மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 80 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இத்தகைய சூழலில், நேற்று காலை 8 மணி அளவில் சென்டிரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அனைத்து மெட்ரோ ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

பின்னர், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால், சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டது.

விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர் வழியாக சென்டிரல் நிலையத்திற்கு சென்றனர். இந்த வழித்தடத்தில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் என்ற அடிப்படையிலேயே இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில், தொழில்நுட்பக்கோளாறு இன்று அதிகாலை சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு பிறகு தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.